தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் இடம்பெறக்கூடிய இப்போதைய முயற்சிகளை ஆதரித்து அவற்றுக்கு உரமேற்றி வருகிறது.
அதேவேளையில், பட்டத்தொழிலர்கள், நிர்வாகிகள், மேலாளர்களுக்கும் (பிஎம்இ) இளைய ருக்கும் அது இன்னும் சிறப்பாக உதவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
"எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஊழியர்களுக்கு உதவுவதில் என்டியுசி பல முன்னேற்றங்களைச் சாதித்துள்ளது. வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவியிருக்கிறது.
"ஆனால் அந்த இரண்டு பிரிவினருக்கும் போதிய அளவுக்கு என்டியுசி இன்னமும் உதவவில்லை," என்று அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் நேற்று தனது மே தினச் செய்தியில் தெரிவித்தார்.
சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் உரையாற்றிய அவர், மனிதவளத் துறையைச் சேர்ந்த 12,000 பேரை நியாயமான வேலை நடைமுறை ஏற்பாட்டின்கீழ் கொண்டு வருவது, பிஎம்இ ஊழியர்களுக்கு உதவும் அத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதி என்றார்.
இளையரைப் பொறுத்தவரை, இன்னும் சிறந்த முறையில் அவர்களுக்கு உதவலாம் என்பதை என்டியுசி அங்கீகரிப்பதாக அவர் கூறினார்.
இதைக் கருத்தில்கொண்டு ஓராண்டுக்கு முன் இளையர் சிறப்புப் பணிக்குழு ஒன்றை என்டியுசி தொடங்கியதை திரு இங் சுட்டினார்.
அந்தப் பணிக்குழு 10,000 இளையரை ஈடுபடுத்தி அவர்களின் முக்கியமான அக்கறைகளை, கவலைகளைத் தெரிந்துகொண்டுள்ளது. இளையர்கள் தெரிவித்தவற்றைக்கொண்டு முதலாளிகளுடன் சேர்ந்து 'வாழ்க்கைத்தொழில் தொடக்கப் பயிலகம்' என்ற முன்னோடித் திட்டத்தை என்டியுசி வடிவமைத்தது.
அந்தத் திட்டம் இந்த ஆண்டு பிற்பாதியில் தொடங்க உள்ளது.
பள்ளிப் படிப்பிற்கு, தேசிய சேவைக்குப் பிறகு இளையர்கள் வேலை ஒன்றைத் தொடங்க அந்தத் திட்டம் வழி வகுக்கும்.
அதே வேளையில், முதலாளிகள் ஊழியரைக் கவர்ந்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் அது உதவும்.
ஊழியர் அணியும் பொருளியல் நிலவரங்களும் மாறி வருகின்றன. அதற்கேற்ப என்டியுசியின் செயல்முறைகளும் உறுப்பியமும் பயிற்சி மாதிரிகளும் கடந்த நான்கு ஆண்டுகளில் பரந்த அளவில் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றன.
அந்தச் சீரமைப்பை அடுத்து இளையர்கள், பிஎம்இ ஊழியர்களின் நலனில் கவனம் செலுத்தப்படுகிறது. பயிற்சிகளைப் பொறுத்தவரை பயிற்சி, உருமாற்றக் குழுமம் ஒன்றை என்டியுசி அமைத்து இருக்கிறது.
ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கியுடன் சேர்ந்து 'டிரஸ்ட் பேங்க்' என்ற வங்கி மூலமாக மின்னிலக்க வங்கித் தொழிலிலும் என்டியுசி வெற்றிகரமான முறையில் ஈடுபட்டு இருக்கிறது என்று திரு இங் குறிப்பிட்டார்.
இந்த மாற்றங்கள் காரணமாக என்டியுசியின் உறுப்பினர்களுக்கு லாபஈவு கிடைத்து இருக்கிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கை 2019ல் 980,000 ஆக இருந்தது. அது இப்போது 1.12 மில்லியனாகக் கூடி இருக்கிறது என்று திரு இங் தெரிவித்தார். 2030ல் 1.5 மில்லியன் உறுப்பினர்கள் என்ற இலக்கை நிறைவேற்றுவது இனிமேல் சிரமமல்ல என்றாரவர்.