'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' திட்டம் நடைமுறை காணவுள்ளதன் தொடர்பில்
சிங்கப்பூரின் பிரதான பாதுகாப்புப் பராமரிப்பு உத்திமுறையாகக் கருதப்படும் 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' (எச்எஸ்ஜி) திட்டம் ஜூலை மாதம் அமலாக்கம் காணவுள்ள நிலையில் அதில் அங்கம் வகிப்பதில் பொதுநல மருத்துவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொதுச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறைகளுடன் ஒருங்கிணைந்த அறிவார்ந்த மருந்தக நிர்வாக அமைப்பு முறைகளுக்கு மாறுவதை அவர்கள் தங்களின் அன்றாட மருந்தகச் செயல்பாடுகளுக்கு உதவியாகக் கருதுகின்றனர். மருத்துவப் பராமரிப்பு வழங்கும் பொறுப்பு மருத்துவமனைகளிடமிருந்து சமூகத்திற்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டது இந்த 'எச்எஸ்ஜி' திட்டம்.
இந்நிலையில், நோயாளிகளின் பதிவேடுகள், வரிசையில் காத்திருப்பு, மருந்துக் குறிப்புகள், மருந்து இருப்பு, கட்டணங்கள் போன்றவற்றை நிர்வகிக்கும் மென்பொருளாக 'சிஎம்எஸ்' எனப்படும் மருந்தக நிர்வாக அமைப்புமுறை உதவும்.
இதுவரை ஐந்து 'சிஎம்எஸ்' நிறுவனங்கள் தங்களின் அமைப்புமுறைகளை 'எச்எஸ்ஜி'க்குப் பொருந்தும் வகையில் அமைத்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அது பொருந்துவதற்கு முதலில் ஒவ்வொரு சிஎம்எஸ்ஸும் தேசிய மின்னியல் சுகாதாரப் பதிவேடுகளுடன் (என்இஎச்ஆர்) ஒருங்கிணைக்கப்பட வேண்டும். 'ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே சுகாதாரப் பதிவேடு' என்ற அமைப்பு முறை, தனியார் மருந்தகங்கள், நிபுணத்துவ மருந்தகங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்து நோயாளியின் பதிவேடுகளை ஒன்றுதிரட்டும் ஆற்றலுடையதாக இருக்க வேண்டும்.
இந்த 'என்இஎச்ஆர்' 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டபோதும் தனியார் துறை இத்திட்டத்தில் ஈடுபடுவதில் மும்முரம் காட்டவில்லை. ரகசியத்தன்மை தொடர்பான கவலைகளும் எழுந்து வந்தன. இதற்கிடையே 'எச்எஸ்ஜி' தளத்துடன் சிஎம்எஸ் ஒருங்கிணைக்கப்பட்டால்தான் நோயாளிகளைச் சேர்த்துக்கொள்ளுதல், சுகாதாரத் திட்டங்களைப் பதிவிடுதல், கூடுதல் மருத்துவச் சோதனைகளுக்கு அனுப்புதல், அரசாங்கத்திடம் தரவுகளைச் சமர்ப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மருத்துவர்கள் அமைப்பு முறையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
'சாஸ்' எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டத்துடன் 'சிஎம்எஸ்' இணைக்கப்படுவது அவசியம் என்பதுடன் இணையப் பாதுகாப்பு நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஏறத்தாழ 800 தனியார் மருந்தகங்கள் எச்எஸ்ஜி திட்டத்தின்கீழ் இணைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்திருந்தார். சிங்கப்பூரில் 1,600க்கும் மேற்பட்ட பொதுநல மருந்தகங்கள் உள்ளன. இதற்கிடையே, மின்னிலக்கமயமாவதில் பலன்கள் உள்ளன என ஒருசில மருத்துவர்கள் கருதினாலும் புதிய அமைப்பு முறையால் நிர்வாகப் பணிகளும் சிக்கல்களும் அதிகரிக்கும் என்கின்றனர் வேறு சிலர்.