ஏப்ரல் மாத விழாக்காலத்தின் கொண்டாட்ட உணர்வை மேலும் தொடர, ஒரு பெரிய அளவிலான உணவு விநியோக முயற்சி இரு அமைப்புகளால் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது.
இந்து அறக்கட்டளை வாரியத் தொண்டூழியர்களின் கடும் உழைப்பால், சுவைமிகு சைவ பிரியாணி, 'தவ்வு சம்பால்', கிழங்குப் பொறியல் ஆகியவை சமைக்கப்பட்டு, அவை 2,100 உணவுப் பொட்டலங்களில் வைக்கப்பட்டன.
அந்த உணவுப் பொட்டலங்கள் வசதி குறைந்த குடும்பங்களுக்கு நேற்று முன்தினம் அவர்களின் வீட்டுக்கே சென்று விநியோகிக்கப்பட்டன.
சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட உணர்வையும் பிரதிபலிக்கும் வகையில் அந்த உணவுப் பொட்டலங்களுடன் இனிப்புப் பதார்த்தங்களும் முறுக்கு வகைகளும் கொடுக்கப்பட்டன.
30க்கு மேற்பட்ட சமூக மன்றங்களைச் சேர்ந்த மக்கள் கழக நற்பணிப் பேரவையின் சுமார் 100 தொண்டூழியர்கள் சிங்கப்பூர் முழுவதும் உள்ள வசதி குறைந்த வீடுகளுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்ய பெரிதும் உதவினர் என்று தெரிவிக்கப்பட்டது.