கி.ஜனார்த்தனன்
சிங்கப்பூர் காற்பந்தாட்ட ரசிகர்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் சித்திரிக்கும் 'காக்கி போலா' என்ற தொலைக்காட்சி நாடகத் தொடருக்கு அனைத்துலக அளவில் தங்க விருது கிடைத்துள்ளது.
ஜெர்மனியின் 'வோர்ல்டுமீடியா ஃபெஸ்டிவல்ஸ்' தொலைக்காட்சி, வர்த்தக ஊடக விருதுகள் 2023ன் கேளிக்கைப் பிரிவில் தங்க விருதைத் தட்டிச் சென்றது 'காக்கி போலா' குழு. இதனுடன் மீடியாகார்ப் நிறுவனம் மொத்தம் 39 விருதுகளைப் பெற்றதாக அந்நிறுவனம் ஏப்ரல் 27ஆம் தேதி தெரிவித்தது.
'சூரியா' மலாய் ஒளிவழியில் ஒளிபரப்பப்பட்ட 'காக்கி போலா' 13 பாகங்களைக் கொண்டது. இந்நாடகம் மலாய் மொழி நாடகமாக இல்லாமல் தமிழ், ஆங்கில வசனங்களைக் கணிசமாகக் கொண்டுள்ள பன்மொழிப் படைப்பாக இருந்தது.
1994ஆம் ஆண்டு நடைபெற்ற 'மலேசிய பிரிமியர் லீக்' ஆட்டத்தில் மலேசியாவின் 'பாகாங்' அணியை எதிர்த்து ஆடிய சிங்கப்பூர் காற்பந்து அணியை ஆதரிக்கும் இளம் தந்தையர்கள் இருவர், அந்நேரத்தில் தங்களுக்குப் பிறக்கும் ஆண் பிள்ளைகளுக்கு 'ஃபாண்டி அகமது', 'சுந்தரமூர்த்தி' என பெயர் வைத்தனர்.
உள்ளூர் காற்பந்து ஜாம்பவான்களின் பெயர்கள் சூட்டப்பட்ட அந்தப் பிள்ளைகள் இளையர்களாக வளர்ந்த பின்பு அவர்களுக்கு இடையே தொடக்கத்தில் மோதல் இருக்கும். படிப்படியாக அவர்கள் எப்படி பக்குவமடைகிறார்கள், அவர்கள் கற்ற படிப்பினைகள் என்னென்ன உள்ளிட்டவற்றை இந்நாடகம் விவரிக்கிறது.
உள்ளூர் தொலைக்காட்சி நடிகர் டேனியல் அஷிராக், மலேசியாவைச் சேர்ந்த யுவராஜ் கிருஷ்ணசாமி ஆகியோருடன் சார்லி கோ, விக்னேஷ்வரி செ., ஃபீர் ரஹ்மான், குளோரியா டான் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நட்சத்திரங்களும் இதில் நடித்துள்ளனர்.
சிங்கப்பூர் விளையாட்டு அணியினரும் இந்நாடகத்தில் சிறப்புத் தோற்றங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
'காக்கி போலா' நாடகம் விருது பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைவதாக நாடகக் குழுவைச் சேர்ந்தவர்கள் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.
எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாமல் விருதுக்கு விண்ணப்பித்த தமது குழுவினர் தங்க விருதை வென்றது இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக நாடகத்தின் இயக்குநர் யாசிர்.எம், 39, கூறினார்.
தீவிர காற்பந்து ரசிகரான திரு யாசிர், 1990களிலும் அதற்கு முந்தைய காலகட்டங்களிலும் சிங்கப்பூர் காற்பந்துக் குழு தென்கிழக்காசிய அளவில் கோலோச்சியது நினைவிருப்பதாகக் கூறினர்.
அப்போது இருந்த உள்ளூர் காற்பந்து ரசிகர்களின் உணர்வுகளை இந்த நாடகத்தில் கொண்டுவர முனைந்ததாக அவர் கூறினார்.
காற்பந்து ஆவணப் படங்களை ஆராய்ந்துபோது காற்பந்தாட்டங்களை எப்படி இன்னும் சுவாரசியமாகப் படமெடுக்கலாம் என்ற யோசனைகள் யாசிருக்குத் தோன்றியது. அந்த யோசனைகளைச் செயல்படுத்துவது கடினமாக இருந்தபோதும் இறுதியில் முடித்துக்காட்டியதாக அவர் கூறினார்.
இயக்குநரைப் போலவே நடிகர்களும் பட்டை தீட்டப்பட்டு மின்னினர். மலாய், தமிழ் ஆகிய இருமொழித் திறனுடன் காற்பந்து நன்றாக விளையாடத் தெரிந்த இளம் நடிகர் தேவைப்பட்டதால் மலேசிய இந்திய நடிகரான யுவராஜ் கிருஷ்ணசாமி சிங்கப்பூருக்கு வரவழைக்கப்பட்டார்.
"எனக்கு மிகவும் பிடித்த வி.சுந்தரமூர்த்தி கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது," என்று கூறிய திரு யுவராஜ், கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நீடித்த குழுவினரின் கடின உழைப்புக்கு இந்த விருது சிறந்த பரிசு என்றார்.
"இதற்காக சிங்கப்பூரில் தங்கிய என்னை, இயக்குநரும் தயாரிப்புக் குழுவினரும் நன்றாக கவனித்துக்கொண்டனர். எனது நடிப்புத்திறனை மற்றுமோர் உயர்மட்டத்திற்கு அவர்கள் கொண்டுசென்றனர்," என்று அவர் கூறினார்.
'காக்கி போலா' நாடகம் தாம் நடித்துள்ள இரண்டாவது மலாய் நாடகம் என்று அந்நாடகத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் 33 வயது விக்னேஷ்வரி செ. தெரிவித்தார்.
"மலாய் மொழியில் பேசி நடிப்பது எனக்கு சவாலாக இருந்தது. ஆயினும், எந்தத் தொழிலிலும் வெற்றி அடைவதற்கு கடின உழைப்பே வழி," என்று அவர் கூறினார்.