புதிய பறவை மகிழ்வனத்தில் குடியேறிய பென்குவின்கள்

புதிய பறவை மகிழ்வனத்தில் குடியேறிய பென்குவின்கள்

2 mins read
98a69e8c-f808-4d3f-8381-5cb9e06b9fe3
-

மண்­டா­யில் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள பேர்ட் பார­டைஸ் எனப்­படும் பறவை மகிழ்­வ­னம் வரும் திங்கட்கிழமை திறக்­கப்­ப­டு­வ­தால் இதற்கு முன்­னர் ஜூரோங் பற­வைப் பூங்­கா­வில் இருந்த 32 பென்­கு­வின் பற­வை­கள் புதிய இடத்­திற்கு மாற்­றப்­பட்டு உள்­ளன.

அவை 7 மீட்­டர் ஆழத்­திற்கு முக்­கு­ளித்து மேலெ­ழும்­பு­வ­தற்கு ஏது­வாக கண்­ணா­டிக்­கூண்­டு­களும் அமைக்­கப்­பட்டு உள்­ளன.

இட­மாற்­றம் செய்­யப்­பட்­ட­வை­களில் 12 ராஜ வகை­யைச் சேர்ந்த பென்­கு­வின்­கள்.

ஏப்­ரல் 28ஆம் தேதி இவை அனைத்­தும் ஏற்­கெ­னவே மூடப்­பட்ட ஜூரோங் பற­வைப் பூங்­கா­வி­லி­ருந்து மண்­டாய் பறவை மகிழ்­வ­னத்­துக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­டன. ஐஸ் கட்டிகளுட னான கூண்டுகளில் வைக்கப் பட்ட பென்குவின்கள் 12 டிகிரி செல்சியஸ் குளிரூட்டி உள்ள லாரிகள் மூலம் மண்டாய்க்குக் கொண்டு செல்லப்பட்டன.

இவற்­றில் ஜெண்­டூஸ் வகை­யைச் சேர்ந்த 11 பென்­கு­வின்­களில் 8 நெதர்­லாந்­தில் இருந்து பிப்­ர­வரி 1ஆம் தேதி ஜூரோங் பற­வைப் பூங்­கா­வுக்­குக் கொண்டு வரப்­பட்டன.

அவை முழுக்க முழுக்க பற­வைப் பூங்­கா­வுக்­குப் புதிது என்­பதா­லும் ஏற்­கெனவே அங்கு இருந்த பென்­கு­வின்­க­ளோடு இணக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் வரை தனித்து வைக்­கப்­பட்டு இருந்­தன. மேலும், மனி­தத் தொடர்­பு­களுக்­குப் பழக்­க­மில்­லா­த­வை­யாக அவை இருந்­த­தா­லும் தனி­யாக வைக்­கப்­பட்டு பயிற்சி அளிக்­கப்­பட்­டது.

இவ்­வாண்டு ஜன­வரி மாதம் ஜூரோங் பற­வைப் பூங்கா மூடப்­பட்­டது. அங்­கி­ருந்த 3,500 பற­வை­கள் புதிய மண்­டாய் பறவை மகிழ்­வ­னத்­துக்கு மாற்­றும் பணி கட்­டம் கட்­ட­மாக நடந்து வந்­தது. இறு­திக்­கட்­ட­மாக பென்­கு­வின்­கள் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டன.

புதிய இடம் பென்­கு­வின்­களுக்கு ஏற்ற சூழலை ஏற்­ப­டுத்த போது­மான கால அவ­கா­சம் தேவைப்­பட்­ட­தால் இறு­தி­யாக அவை இட­மாற்­றம் செய்­யப்­பட்­ட­தாக மண்­டாய் வன­வி­லங்­குக் குழு­மத்­தின் விலங்கு பரா­ம­ரிப்­புப் பிரிவு அதி­காரி திரு­வாட்டி ஏனைஸ் டிரிட்டோ கூறி­னார்.

அண்­டார்­டிகா துணைக் கண்ட தீவு­களில் இரவு, பகல் மாறு­வ­தைப் போல காட்­டும் விளக்­கொ­ளி­கள் பென்­கு­வின் கூண்­டு­களில் அமைக்­கப்­பட்டு உள்­ளன.

கால­நே­ரத்­திற்கு ஏற்ப தங்­க­ளது உடல்­நி­லை­யைச் சரிப்­ப­டுத்­திக்­கொள்ள அவற்­றிற்கு இந்த ஏற்­பாடு கைகொ­டுக்­கும். மேலும், உறைய வைக்­கப்­பட்ட மீன்­களை அவற்­றுக்கு உண­வாக வழங்­கு­வ­தற்­கான உண­வூட்­டும் கரு­வி­களும் நீருக்­க­டி­யில் பொருத்­தப்­பட்டு உள்­ளன.

நீருக்­குள் மூழ்கி விளை­யா­ட­வும் இரை­தே­ட­வும் அவற்­றுக்கு இத­னால் வசதி ஏற்­படும்.

ஜூரோங் பற­வைப் பூங்­கா­வில் நல்ல தண்­ணீ­ரில் வைக்­கப்­பட்­டி­ருந்த பென்­கு­வின்­க­ளுக்கு உப்­பு­ நீர் சூழ­லில் வாழும் தன்­மையை ஏற்­ப­டுத்த அவை அன்­றா­டம் உண்­ணும் மீன்­களில் உப்பு மாத்­தி­ரை­கள் திணிக்­கப்­பட்­ட­தாக மண்­டாய் விலங்கு பராமரிப்­பா­ளர் நூரல்­யான்டி ஜேஸ்னி தெரி­வித்­தார்.