ஆஸ்திரேலியாவின் கேன்பராவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சர்நிலைக் கூட்டத்தில் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் தங்களுக்கு இடையிலான லட்சிய பங்காளித்துவத்தை உறுதிசெய்துள்ளன.
அத்துடன், வட்டார நிலைத்தன்மையை மேம்படுத்த இணைந்து ஒத்துழைக்கவும் அவை இணங்கி உள்ளன.
இரு நாடுகளின் வெளியுறவு, தற்காப்பு மற்றும் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்ற இந்த கூட்டுக் கூட்டத்தில் கடல்துறை தொடர்பாக வட்டாரத்தில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்த அக்கறையைப் பகிர்ந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் ஆறு அமைச்சர்களும் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. சிறியது, பெரியது என்ற பேதமின்றி உலக நிலைத்தன்மைக்குப் பங்களிக்க எல்லா நாடுகளுக்கும் பொறுப்பு உண்டு என்றும் தங்களுக்கு இடையிலான சச்சரவுகளை அமைதியான முறையில் பேசித் தீர்த்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டனர்.
ஆஸ்திரேலியா தனது தற்காப்புச் செலவினத்தை கடந்த வாரம் உயர்த்தியது. அத்துடன் நெடுந்தொலைவு ராணுவத் திறன்களை வளர்க்கவும் அது உறுதிபூண்டது.
தென்சீனக் கடல் வட்டாரத்தில் சீனாவின் உறுதிப்பாடும் ராணுவச் செலவினமும் அதிகரித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியா இந்த முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் இணைந்து 'ஆக்கஸ்' என்னும் பாதுகாப்பு உடன்பாட்டை ஆஸ்திரேலியா செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, அணுவாயுதங்களின் உதவி இன்றி அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைப் பெறும் முதல் நாடு என்னும் நிலையை எட்ட ஆஸ்திரேலியா திட்டமிட்டு உள்ளது. இந்த உடன்பாட்டுக்கு சிங்கப்பூரின் ஆதரவு உண்டு என வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
"வட்டாரப் பாதுகாப்புக்கு ஆக்ககரமான பங்களிப்பை வழங்கும் வரை இந்த உடன்பாட்டை சிங்கப்பூர் ஆதரிக்கும்," என்றார் அவர்.
உடன்பாட்டில் கையெழுத்திட்டு உள்ள மூன்று நாடுகளுடனும் சிங்கப்பூருக்கு நீண்டகால உறவுகள் உண்டு என்பதால் இணைந்து பணியாற்ற சிங்கப்பூர் தயாராக உள்ளது என்றும் டாக்டர் விவியன் தெரிவித்தார்.

