பயங்கரவாத, தீவிரவாத அச்சுறுத்தல்கள் இன்னும் நீங்கவில்லை: பிரதமர் லீ
பயங்கரவாதம், தீவிரவாதம் தொடர்பான அச்சுறுத்தல்கள் இன்னும் நீங்கவில்லை. அவை தொடர்ந்து உருமாறியபடியே உள்ளதால் சிங்கப்பூர் அதன் பாதுகாப்பை மெத்தனமாகக் கருத இயலாது என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
ஈரானிலும் சிரியாவிலும் 'ஐஎஸ்' பயங்கரவாத அமைப்பு, அல்கயீதா, ஜமா இஸ்லாமியா போன்றவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. உலகெங்கும் தாக்குதல்களை நடத்துவதற்குச் சிலரைத் தூண்டிவிடும் ஆற்றல் அவற்றுக்கு உள்ளது என்பதைப் பிரதமர் சுட்டினார்.
சமய மறுவாழ்வு அமைப்பின் (ஆர்ஆர்ஜி) 'மாஜுலா' காட்சிக் கூடத் திறப்பு நிகழ்ச்சியில் நேற்று அவர் உரையாற்றினார்.
பயங்கரவாதக் குழுக்களின் இலக்குப் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து இடம்பெறுவதைக் குறிப்பிட்ட திரு லீ, அண்மைய ஆண்டுகளில் சிங்கப்பூரில் சுயமாகவே தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைச் சுட்டினார்.
2015ஆம் ஆண்டுக்குப் பிறகு அத்தகைய 49 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 37 பேர் சிங்கப்பூரர்கள். பெண்களும் இளையர்களும் அவர்களில் அடங்குவர் என்றார் திரு லீ.
அனைவரும் விழிப்புடன் இருப்பதே பயங்கரவாதத்துக்கு எதிரான வலுவான தற்காப்பு என்று கூறிய அவர், இன, சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான போரில் 'ஆர்ஆர்ஜி' கடந்த 20 ஆண்டுகளாக வழங்கிவரும் பங்களிப்பிற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அவ்வமைப்பின் சமயக் கல்விமான்கள் பயங்கரவாதிகளுக்கு சமய மறுவாழ்வு ஆலோசனை வழங்க முன்வந்ததை அவர் குறிப்பிட்டார். 2001ல் ஜமா இஸ்லாமியா அமைப்பின் தாக்குதல் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்ட பிறகு, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து அவர்கள் செயல்பட்டனர்.
மார்ச் மாதம் காலமான உஸ்தாத் அலியின் வழிகாட்டுதலில் அக்கல்விமான்கள் துணிச்சலுடன் செயல்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர் உஸ்தாத் அலிக்குத் தமது உரையில் புகழஞ்சலி செலுத்தினார்.
'ஆர்ஆர்ஜி' அமைப்பு நேற்று அதன் 30ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

