பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரின் வேலைச் சந்தையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாதிப்பு சற்றுக் குறைவாகவே இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
உலகப் பொருளியல் கருத்தரங்கு நடத்திய 'வேலைகளின் வருங்காலம் 2023' எனும் ஆய்வு முடிவுகள் அதனைத் தெரிவித்து உள்ளன.
ஏறத்தாழ 50,000 ஊழியர்கள் வேலை பார்க்கும் மொத்தம் 80 நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
பொருளியல் வளர்ச்சியின் வேகம், விநியோகப் பற்றாக்குறை, வாழ்க்கைச் செலவினம், புதிய தொழில்நுட்பங்களை வர்த்தகங்களில் நடைமுறைப்படுத்துதல் போன்றவை வேலைச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள்.
வேலைச் சந்தை பாதிப்பு விகிதம் என்பது இத்தகைய அம்சங்களால் பாதிக்கப்படும் வேலைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக அளவில் இந்த விகிதம் 23 விழுக்காடாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் இவ்விகிதம் 21 விழுக்காடாக இருக்கும் எனத் தெரிகிறது.
சிங்கப்பூரில் உள்ள 76 விழுக்காட்டு நிறுவனங்கள் 2027ஆம் ஆண்டுக்குள் புவிசார் அரசியல் விவகாரங்களால் தங்கள் வர்த்தகம் உருமாற்றம் அடையும் எனக் கருதுகின்றன. உலக அளவில் அந்த எண்ணிக்கை 48 விழுக்காடு.
புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதில் சிங்கப்பூர் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. ஆய்வில் கலந்துகொண்ட நிறுவனங்களில் 72 விழுக்காட்டு நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகள் அதனால் உருவாகும் என்று கருதுகின்றன. உலக அளவில் அந்த விகிதம் 57 விழுக்காடு.
மின்னிலக்க நடைமுறையை விரிவுபடுத்துவதையும் மூப்படையும் மக்கள்தொகையையும் பிற நாட்டு நிறுவனங்களை விட ஆக்ககரமாகவே சிங்கப்பூர் நிறுவனங்கள் கருதுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
ஊழியர்களிடையே பல மொழி அறிவை இங்குள்ள நிறுவனங்கள் குறைவாகவே வலியுறுத்துகின்றன.
வெளிநாட்டுத் திறனாளர் தொடர்பிலான குடிநுழைவுக் கொள்கையில் மாற்றம் தேவை என்று 61% சிங்கப்பூர் நிறுவனங்கள் கருதுவதாகவும் உலக அளவில் அந்த விகிதம் 28% என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

