குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஆதரவு தரும் நோக்கில் லூதரென் சமுதாயப் பராமரிப்புச் சேவை எனும் அமைப்பு எட்டு வார ஆதரவுத் திட்டத்தை நடத்தியுள்ளது.
சென்ற ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை இடம்பெற்ற இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மூன்று ஆண்கள் கலந்துகொண்டனர்.
குடும்ப வன்முறை குறித்த கலந்துரையாடல், பாதிக்கப்பட்ட மற்றவர்களின் அனுபவங்களைப் புரிந்து கொள்ளுதல், ஆதரவுக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு இந்தத் திட்டம் வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆதரவுத் திட்டத்தின் முதற்கட்டம் வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது முறை இதனை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்படுகிறது.
சிங்கப்பூரில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்செயல்கள் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இருந்தாலும் மனைவியால் துன்புறுத்தப்படும் ஆண்களுக்கு ஆதரவு தரும் திட்டங்கள் இல்லை என்பதை சமூக சேவையாளர்களும் லூதரென் சமுதாயப் பராமரிப்புச் சேவை அமைப்பினரும் சுட்டினர்.
பொதுவாக இத்தகைய பாதிப்புகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மறைத்துக்கொண்டு நடமாடுவது ஆண்களின் இயல்பு என்று கூறினர் பாதிக்கப்பட்ட ஆண்கள்.
இத்திட்டத்தின் மூலம் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்ததாகவும் இத்தகைய வலி பிறருக்கும் ஏற்பட்டதுண்டு என்று புரிந்துகொள்ள வழிவகுத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
லூதரென் அமைப்பு இம்மாதம் 20ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ள 'ரியலிங்க்' நிகழ்ச்சி மூலம் இந்த ஆதரவுத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்துள்ளது.
திட்டத்தின் முதற்கட்டத்தில் பங்குபெற்ற மூன்று ஆண்களும் அடுத்தடுத்த கட்டங்களில் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
ஆதரவுக் குழுவில் பதிவு செய்துகொள்ள விரும்புவோர் connect@lccs.org.sg எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

