இளையர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தைக் கண்காணித்துத் தடுக்க நடவடிக்கை

இளையர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தைக் கண்காணித்துத் தடுக்க நடவடிக்கை

2 mins read
9532e870-1b0b-42f9-8310-e023bf12105c
'பெர்ட்டபிஸ்' இடைநிலை இல்லத்தில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் (வலமிருந்து இரண்டாவது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் இளையர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தைக் கண்காணித்துத் தடுக்க உதவும் புதிய குழு அமைக்கப்படவிருக்கிறது.

உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் இதைத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கு இடையே போதைப்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கும் சராசரி வயது 15.9 என்று மனநலக் கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் கண்காணிப்புக் குழுவை அமைக்கவிருக்கிறது.

போதைப்பொருள் புழக்கத்திலிருந்து மீண்டுவர உதவும் 'பெர்ட்டபிஸ்' இடைநிலை இல்லத்திற்குச் சென்றிருந்தபோது அமைச்சர் சண்முகம் இத்தகவலை வெளியிட்டார்.

இடைநிலை இல்லத்தில் இருப்போருக்கான திறன் பயிற்சித் திட்டத்தை திரு சண்முகம் தொடங்கிவைத்துப் பேசினார்.

"போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். வீடுகளில் பெற்றோர் மூலமும் பள்ளிகள், சமுதாயம், தேசிய சேவை எனப் பல்வேறு முனைகளிலும் இதை அணுகவேண்டும்," என்று அவர் கூறினார்.

இளையர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் அமைச்சுகள் நிலைக் குழுவிற்கு திரு சண்முகம் தலைமை வகிப்பார்.

குழுவில் கல்வி அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு, தற்காப்பு அமைச்சு, தொடர்பு, தகவல் அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் மக்கள் கழகமும் இணைந்து செயல்படும்.

அந்த அமைச்சுகளின் மூத்த துணையமைச்சர்கள், துணையமைச்சர்கள், மூத்த நாடாளுமன்ற செயலாளர்கள் என ஏழு பேர் அதில் இடம்பெற்றிருப்பர்.

இளையர்கள் இடையிலான போதைப்பொருள் புழக்கப் பிரச்சினையைக் கையாள்வதன் தொடர்பில் அரசாங்கத்தை முழுமையாக உள்ளடக்கிய நடவடிக்கைகளில் குழு கவனம் செலுத்தும்.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அக்குழு செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.