வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு காட்டுப் பன்றி 34 வயது துர்காதேவியைத் தாக்கியிருக்கிறது்.
எனினும், அவருக்கு பயம் ஏற்படவில்லை.
மாறாக, மனிதரைத் தாக்கிவிட்டது என்று அறிந்தால் அது கொல்லப்பட்டுவிடும் எனும் கவலைதான் அவருக்குள் ஏற்பட்டது.
மே ஒன்றாம் தேதி நள்ளிரவில் புக்கிட் பாஞ்சாங் குளோஸ் பேருந்து நிறுத்தும் இடத்தில் தான் இறங்கியபோது, தன்னை அந்தக் காட்டுப் பன்றி நான்கு முறை தாக்கியதால் அவர் சாலையில் போய் விழுந்தார்.
அந்த வேளையில் அவ்வழியாக மெதுவோட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தமது அக்காவுக்கு உதவி செய்ததாக துர்காதேவியின் தங்கை ஸ்ரீதேவி, 29, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
வலது கால், பிட்டம், கை ஆகிய இடங்களில் பல காயங்களுக்கு உள்ளான, விலங்குப் பிரியரான தனது அக்கா, அந்தக் காட்டுப் பன்றி கருணைக்கொலை செய்யப்பட்டு விடுமே என்றுதான் கவலைப்பட்டார் என்றார் ஸ்ரீதேவி.
"நல்லவேளையாக தாக்கப்பட்டது நானாக இருந்தேன். ஒரு பிள்ளை, பாதிப்படையக்கூடிய ஒருவர் என்று வேறு யாராக இருந்திருந்தால், விளைவு இன்னும் மோசமாக இருந்திருக்கும்," என்று சாங்கி விமான நிலையக் குழுமத்தில் நிர்வாகியாகப் பணியாற்றும் துர்காதேவி சொன்னார்.
பங்கிட் ரோடு, புளோக் 270க்கு அருகே உதவி தேவைப்படுவதாக மே ஒன்றாம் தேதி இரவு 11.50 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
குடிமைத் தற்காப்புப் படை, துர்காதேவியை டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது.
இச்சம்பவம் பற்றி தங்களுக்கு செவ்வாய்க்கிழமை (2 மே) காலையில் தகவல் கிடைத்ததிலிருந்து தாங்கள் அந்தக் குடும்பத்துடன் தொடர்பில் இருந்துவருகிறோம் என்று தேசிய பூங்காக் கழகம் கூறியது.
தாக்குதல் நடந்த சாலையோரத்தில் அந்தக் காட்டுப் பன்றி விழுந்து கிடந்ததை தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் கண்டனர்.
அதன் பின்னங்கால்கள் உடைந்திருந்தன.
பின்னர் அது மனிதாபிமான அடிப்படையில் கருணைக்கொலைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டது என்று வனவிலங்கு மருத்துவர் கூறினார்.
காயங்கள் காரணமாக தனது அக்காவுக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறிய ஸ்ரீதேவி, வலது கையில் நரம்பு சிதைந்திருந்தது, பின்னங்காலில் ஆழமான வெட்டுகள் இருந்தன என்றும் தான் பார்த்தவற்றில் இதுதான் ஆக மோசமான காட்டுப் பன்றி தாக்குதல் என்று மருத்துவர் கூறியதாகவும் விவரித்தார்.
இவ்வாண்டில் நிகழ்ந்திருக்கும் இரண்டாவது காட்டுப் பன்றி தாக்குதல் இது என்றும் நான்கு ஆண்டுகளில் 28வது சம்பவம் என்றும் பூங்காக் கழகம் தெரிவித்தது.

