அடித்தளத் திட்டங்களின் தலைவர்களை உருவாக்கி அவர்களுக்கு ஆதரவளிக்கும் புதிய ஆதரவுத் தொகை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
'தி எஸ்ஜி ஸ்ட்ரோங் ஃபெல்லோஷிப்' எனும் அமைப்பு, 15 பேருக்கு அவர்களின் அடித்தளத் திட்டங்களுக்கு தலா $10,000 ஆதரவுத் தொகை வழங்கப்படும்.
இந்த ஆதரவுத் தொகையை 'தி மெச்சூரிட்டி டிரஸ்ட்' எனும் அறப்பணி அமைப்பு அளிக்கிறது. அதற்கு ஆதரவளிக்கும் விதமாக ஜிஐசி எனும் உலகளாவிய முதலீட்டு நிறுவனம் $250,000 தொகையை வழங்குகிறது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று இந்த ஆதரவுத் தொகைத் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
இந்தப் புதிய ஆதரவுத் தொகை திட்டம், அடித்தளத் திட்டங்களை நிறைவேற்றும் தலைவர்கள் சமூகத்தை உருவாக்க உதவும்.
அவர்கள் தனியாகவோ அல்லது பலரும் ஒன்றுசேர்ந்து நிதி வளங்களைத் திரட்டி பெரிய, மிகவும் சிக்கலான பிரச்சினைகளை ஒரு குழுவாகச் சமாளிக்கலாம்.
சமூக அளவில் தாக்கத்தை எதிர்கொள்ளும் குழுக்களை உருவாக்குவதில் அறப்பணி அமைப்புகள் முக்கிய பங்காற்றுவதாக அமைச்சர் மசகோஸ் தெரிவித்தார்.
'தி மெச்சூரிட்டி டிரஸ்ட்' எனும் அறப்பணி அமைப்பும் ஜிஐசி எனும் உலகளாவிய முதலீட்டு நிறுவனமும் இணைந்து கொவிட்-19 பெருந்தொற்று காலத்தின்போது தனது 'தி எஸ்ஜி ஸ்ட்ரோங் நிதித் திட்டம்' மூலம் அடித்தளத் திட்டங்களுக்கும் குழுக்களுக்கும் நிதியாதரவு அளித்ததை அமைச்சர் சுட்டினார்.
"அடுத்த கட்டமாக நாம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து இன்னும் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். நமக்குள் இருக்கும் பலங்களையும் வளங்களையும் ஒன்றுதிரட்டி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்," என்றும் திரு மசகோஸ் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்த நிதித் திட்டம் 150க்கு மேற்பட்ட அடித்தளத் திட்டக் குழுக்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், இரவில் வெளியிடங்களில் தூங்குபவர்கள், குறைந்த வருமான குடும்பங்கள் என 390,000 பயனாளர்களுக்கு உதவி வழங்கியுள்ளது.
'தி எஸ்ஜி ஸ்ட்ரோங் ஃபெல்லோஷிப்' எனும் புதிய ஆதரவுத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களில் ஒருவர் 28 வயது சமூக சேவை ஊழியர் ஸுலைஹா ஸுல்கிஃப்லி.
2020 ஏப்ரல் முதல் கொவிட்-19 பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட தனது அண்டை வீட்டாருக்கு ஸுலைஹாவின் குடும்பம் உதவி செய்யத் தொடங்கியது. மளிகைப் பொருள்களையும் அத்தியாவசிய வீட்டுப் பொருள்களையும் அக்குடும்பம் வாங்கித் தந்தது.
அவரது தந்தை ஓய்வுபெற்ற துப்புரவுப் பணியாளர். அவர்கள் ஈரறை வாடகை வீட்டில் வசித்தனர்.
'புரோஜெக்ட் ஹில்ஸ்' என்று அழைக்கப்படும் அக்குழு, பல வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவும் வகையில்
தன்னை வளர்த்துக்கொண்டுள்ளது.
"மற்றவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபடும் எங்களைப் போன்ற சிறிய அமைப்புகளுக்கு நிதியாதரவு வழங்கினால், நாங்கள் இன்னும் உற்சாகத்துடன் பணிகளை மேற்கொள்வோம்," என்றார் ஸுலைஹா.

