கி.ஜனார்த்தனன்
வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களுக்கிடையே அறிவாற்றலைக் கூர்மைப்படுத்துவதும் அகத்திற்கு நிம்மதி தருவதும் வாழ்நாள் கல்வி என்பதை அனுபவத்தில் உணர்ந்து கூறினார் ஐந்து பிள்ளைக்குத் தந்தையான ஓய்வுபெற்ற பொறியாளர் 61 வயது முகம்மது மலேசியா.
நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரியில் சூரிய ஒளிமின்னழுத்தத் துறையில் நேற்று பட்டயம் பெற்ற இவருக்கு அடுத்த வாரம் தமது இளைய மகள் ஃபாத்திமா பட்டயம் பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சி.
ஒன்பது பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த திரு மலேசியா, குடும்பச் சூழ்நிலை காரணமாக 14 வயதிலேயே வேலை செய்யத் தொடங்கினார்.
தம் வயதை ஒத்தவர்கள் பள்ளி சென்று படிக்கிறார்களே என்ற வேதனை அப்போது அவரது மனத்தைத் தொடர்ந்து உறுத்தியது.
எனவே, வேலை பார்த்துக் கொண்டே பகுதிநேரமாகப் படித்து 'என்டிசி3' மின்னியல் சான்றிதழ் பெற்றார்.
பல்வேறு தனியார் சான்றிதழ் களையும் எம்டிஐஎஸ் கல்லூரியின் வர்த்தக நிர்வாகப் படிப்பையும் முடித்திருந்தபோதும் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அவரால் பட்டயக்கல்வியில் சேர முடியவில்லை. கணக்குப் பாடத்தில் அடித்தளப் பயிற்சி இல்லாததால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
நாற்பது வயதில்தான் பட்டயப் படிப்பை மேற்கொள்ள அவருக்குக் காலம் கனிந்தது. நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அவர் பெற்ற பட்டயம் வேறு பல பட்டயங்களைப் பெறுவதற்கு வழிவகுத்ததைப்போல இருந்தது.
பட்டக்கல்வியைத் தொடர்வதற்குப் பதிலாக தொடர்ந்து வெவ்வேறு பட்டயப் படிப்புகளை மேற்கொள்வதற்கு வாழ்நாள் கல்வியில் உள்ள நம்பிக்கை என்றார் திரு மலேசியா. வாழ்நாள் கல்வி தம் வாழ்க்கைக்குப் பல விதங்களில் செறிவூட்டுவதாக அவர் கூறினார்.
"ஆள்குறைப்பு குறித்த பயம் குறைகிறது. வேலையிட அரசியலால் பாதிக்கப்படும்போது ஏற்படும் கோபத்தை, படித்து சாதிக்கவேண்டும் என்ற வைராக்கியமாக மாற்றலாம். அத்துடன், தொடர்ந்து படிப்பதால் அப்பா மிகவும் படித்தவர் என்ற மரியாதை பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது," என்று அவர் கூறினார்.
"வேலையிடத்தில் வருங்காலத்தில் எத்தகைய திறன்கள் தேவைப்படும் என்பதை அறிந்து படிக்கவேண்டும்.
"எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம் உள்ளது. உறங்குவதற்கு எட்டு மணி நேரமும் வேலை செய்ய எட்டு மணி நேரமும் உள்ளது. எஞ்சியுள்ள நேரத்தைச் சரியான முறையில் நிர்வகிக்க இல்லத்தரசியான மனைவியும் பிள்ளைகளும் கைகொடுக்கின்றனர்," என்றார்.
பட்டயப் படிப்பை நாற்பது வயதுக்குப் பிறகு கூடுதல் சலுகைகளுடன் மேற்கொள்ள முடியும் என்பதைச் சுட்டிய திரு மலேசியா, கல்விக்கு வயது தடை யாக இருக்கக்கூடாது என்றார்.
தந்தையுடன் பட்டயம் பெறுவது மிக அரிய வாய்ப்பு என்று கூறும் திரு மலேசியாவின் மகள் ஃபாத்திமா, அவரைப் போலவே வாழ்நாள் கல்வியில் நாட்டம்கொண்டவர்.
தொடர்ந்து படிப்பதால் தொடர்ந்து வேலை செய்ய முடிகிறது, வேலைத் திறனும் கூடுகிறது. வருமானம் இருப்பதால் குடும்பத்தினரை நிம்மதியாக வைத்திருக்க முடிகிறது. அவர்கள் நிம்மதியாக இருப்பதால் தங்குதடை இன்றிப் படிக்க முடிகிறது. இது தம் வாழ்க்கையில் தொடரும் ஆனந்த சுழல் என்றார் திரு மலேசியா.
janark@sph.com.sg

