மகளுடன் பட்டயம் பெற்றதில் தந்தைக்குப் பெருமகிழ்ச்சி

மகளுடன் பட்டயம் பெற்றதில் தந்தைக்குப் பெருமகிழ்ச்சி

2 mins read
213ac580-a8fb-4aa9-82ad-fea5e1adf9bb
-

கி.ஜனார்த்­த­னன்

வாழ்க்­கை­யின் ஏற்ற இறக்­கங்­களுக்­கி­டையே அறி­வாற்­ற­லைக் கூர்­மைப்­ப­டுத்­து­வ­தும் அகத்­திற்கு நிம்­மதி தரு­வ­தும் வாழ்­நாள் கல்வி என்­பதை அனு­ப­வத்­தில் உணர்ந்து கூறி­னார் ஐந்து பிள்ளைக்­குத் தந்­தை­யான ஓய்­வு­பெற்ற பொறி­யா­ளர் 61 வயது முகம்­மது மலே­சியா.

நீ ஆன் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யில் சூரிய ஒளி­மின்­ன­ழுத்­தத் துறை­யில் நேற்று பட்­ட­யம் பெற்ற இவ­ருக்கு அடுத்த வாரம் தமது இளைய மகள் ஃபாத்திமா பட்­ட­யம் பெறு­வது இரட்­டிப்பு மகிழ்ச்சி.

ஒன்­பது பிள்­ளை­கள் கொண்ட குடும்­பத்­தில் பிறந்த திரு மலே­சியா, குடும்­பச் சூழ்நிலை கார­ணமாக 14 வய­தி­லேயே வேலை செய்­யத் தொடங்­கி­னார்.

தம் வய­தை ஒத்தவர்கள் பள்ளி சென்று படிக்­கி­றார்­களே என்ற வேதனை அப்­போது அவரது மனத்­தைத் தொடர்ந்து உறுத்­தி­யது.

எனவே, வேலை பார்த்துக் கொண்டே பகு­தி­நே­ர­மா­கப் படித்து 'என்­டிசி3' மின்­னி­யல் சான்­றி­தழ் பெற்­றார்.

பல்­வேறு தனி­யார் சான்­றி­தழ் களை­யும் எம்­டி­ஐ­எஸ் கல்­லூ­ரி­யின் வர்த்­தக நிர்­வா­கப் படிப்­பை­யும் முடித்­தி­ருந்­த­போ­தும் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் அவ­ரால் பட்­ட­யக்­கல்­வி­யில் சேர முடி­ய­வில்லை. கணக்­குப் பாடத்­தில் அடித்­த­ளப் பயிற்சி இல்­லா­த­தால் அவ­ரது விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

நாற்­பது வய­தில்­தான் பட்­டயப் படிப்பை மேற்­கொள்ள அவருக்குக் காலம் கனிந்­தது. நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் அவர் பெற்ற பட்­ட­யம் வேறு பல பட்­ட­யங்­க­ளைப் பெறு­வ­தற்கு வழிவகுத்ததைப்போல இருந்­தது.

பட்­டக்­கல்­வி­யைத் தொடர்­வதற்­குப் பதி­லாக தொடர்ந்து வெவ்­வேறு பட்­ட­யப் படிப்­பு­களை மேற்­கொள்­வ­தற்கு வாழ்­நாள் கல்­வி­யில் உள்ள நம்­பிக்கை என்­றார் திரு மலே­சியா. வாழ்­நாள் கல்வி தம் வாழ்க்­கைக்­குப் பல விதங்­களில் செறி­வூட்­டு­வ­தாக அவர் கூறி­னார்.

"ஆள்கு­றைப்பு குறித்த பயம் குறை­கிறது. வேலை­யிட அர­சி­ய­லால் பாதிக்­கப்­ப­டும்­போது ஏற்படும் கோபத்தை, படித்து சாதிக்­க­வேண்­டும் என்ற வைராக்­கி­ய­மாக மாற்­ற­லாம். அத்­து­டன், தொடர்ந்து படிப்­ப­தால் அப்பா மிக­வும் படித்­த­வர் என்ற மரி­யாதை பிள்­ளை­களுக்கு ஏற்­ப­டு­கிறது," என்று அவர் கூறி­னார்.

"வேலை­யி­டத்­தில் வருங்­காலத்­தில் எத்தகைய திறன்­கள் தேவைப்­படும் என்­ப­தை அறிந்து­ படிக்­க­வேண்­டும்.

"எல்­லோ­ருக்­கும் ஒரு நாளில் 24 மணி நேரம் உள்­ளது. உறங்குவதற்கு எட்டு மணி நேர­மும் வேலை செய்ய எட்டு மணி நேர­மும் உள்­ளது. எஞ்­சி­யுள்ள நேரத்­தைச் சரி­யான முறை­யில் நிர்­வகிக்க இல்­லத்­த­ர­சி­யான மனை­வி­யும் பிள்ளைகளும் கைகொ­டுக்­கின்­ற­னர்," என்றார்.

பட்­ட­யப் படிப்பை நாற்­பது வய­துக்­குப் பிறகு கூடு­தல் சலுகை­க­ளு­டன் மேற்­கொள்ள முடியும் என்­ப­தைச் சுட்­டிய திரு மலே­சியா, கல்­விக்கு வயது தடை ­யாக இருக்­கக்­கூ­டாது என்றார்.

தந்­தை­யு­டன் பட்­ட­யம் பெறு­வது மிக அரிய வாய்ப்பு என்று கூறும் திரு மலே­சி­யா­வின் மகள் ஃபாத்திமா, அவரைப் போலவே வாழ்­நாள் கல்­வி­யில் நாட்­டம்­கொண்­ட­வர்.

தொடர்ந்து படிப்­ப­தால் தொடர்ந்து வேலை செய்ய முடிகிறது, வேலைத் திற­னும் கூடு­கிறது. வரு­மா­னம் இருப்­ப­தால் குடும்­பத்­தி­னரை நிம்­ம­தி­யாக வைத்­தி­ருக்க முடி­கிறது. அவர்கள் நிம்­ம­தி­யாக இருப்­ப­தால் தங்­கு­தடை இன்­றிப் படிக்க முடி­கிறது. இது தம் வாழ்க்­கை­யில் தொட­ரும் ஆனந்த சுழல் என்­றார் திரு மலே­சியா.

janark@sph.com.sg