மேல்முறையீட்டைத் தொடர்ந்து 'தி ஆன்லைன் சிட்டிசன்' (டிஓசி) இணையத்தளத்தின் தலைமை ஆசிரியருக்கும் பங்களிப்பாளருக்கும் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை உறுப்பினர்களை அவதூறாகப் பேசியதற்காக 2022ல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தலா மூன்று வாரச் சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் நேற்று அபராதமாகக் குறைத்தது.
நீதிபதி ஐடிட் அப்துல்லா குற்றவியல் அவதூறுக்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றாலும் மூன்று வார சிறை மிகவும் அதிகம் எனக் குறிப்பிட்டார்.
டேனியல் டி கோஸ்டா அகஸ்டினுக்கு சிறைக்குப் பதிலாக $10,000 அபராதம் விதிக்கப்பட்டது, ஆசிரியர் டெர்ரி சூவுக்கு $8,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
டி கோஸ்டா, 2018 செப்டம்பர் 4 அன்று தனது நண்பரான திரு சிம் வீ லீயின் மின்னஞ்சல் கணக்கிலிருந்து 'டிஓசி'க்கு "பிஏபி எம்பி மன்னிப்புக் கோருகிறார்" என்ற தலைப்பில் கடிதம் எழுதியிருந்தார். அவர் அதில் 'வில்லி சிம்' என்று கையெழுத்திட்டிருந்தார். சில நேரங்களில் திரு சிம் பயன்படுத்தும் பெயர் அது. அதே நாளில், 'டிஓசி' இணையதளத்தில் 'அதிகபட்ச ஊழல்' என்ற சொற்றொடரைக் கொண்ட அக்கடிதத்தை சூ வெளியிட்டார்.
அந்தக் கடிதம், முன்னாள் அரசியல் கைதியான தியோ சோ லங்கை சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியுடன் இணைத்துப் பேசியதற்காக மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ கியான் பெங் மன்னிப்புக்கோரியது தொடர்பானது என ஒரு ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2018 செப்டம்பர் 18ஆம் தேதி அன்று, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) சூவை அறிவுறுத்தி யதையடுத்து அக்கடிதம் இணையத்திலிருந்து அகற்றப்பட்டது.
நவம்பர் 2021ல் மாவட்ட நீதிபதியால் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப் பளிக்கப்பட்டு 2022 ஏப்ரலில் தண்டனை விதிக்கப்பட்டது.

