கருணாநிதி துர்கா
ரெட் லயன்ஸ் வான்குடை வீரரான 3ஆம் வாரண்ட் அதிகாரி ஜெஃப்ரி ஹெங் சென்ற ஆண்டின் தேசிய தின அணிவகுப்பின்போது நிலை தவறி தரை இறங்கிய சம்பவத்தை அடுத்து ரெட் லயன்ஸ் வீரர்களின் பயிற்சி, பாதுகாப்பு நிர்வாகத்தை ஆராய மறுபரிசீலனைக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு, ரெட் லயன்ஸ் திறன் விளக்கக் காட்சிக் குழுவினரின் பயிற்சி, பாதுகாப்பு நிர்வாகத்திற்கான மேம்பாடுகளை பரிந்துரைத்ததை அடுத்து அவை அமலாகி உள்ளன.
"ரெட் லயன்ஸ் பயிற்சி முறை பாதுகாப்பானதாக, முன்னேற்றகரமானதாக, துடிப்புமிக்கதாக இருக்கிறது. வலுவான பயிற்சி, பாதுகாப்பு நிர்வாக முறைகளை அமல்படுத்த கணிசமான வளங்களும் முயற்சிகளும் முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றன.
"அளிக்கப்படுகின்ற பயிற்சிகளும் பாதுகாப்பு நடைமுறைகளும் அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு இருக்கின்றன," என்று தெரிவித்த அந்த மறுபரிசீலனைக் குழு, நடைமுறை குறைபாடுகள் எதையும் கண்டறியவில்லை.
வான்குடை சாகச வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 20 ஆண்டுகாலப் பயிற்சி அனுபவம் உள்ளதோடு அவர்கள் சராசரியாக 400 முதல் 500 முறை இந்த சாகசத்தை நிகழ்த்தி உள்ளனர்.
வான்குடை தரையிறங்குதலின் விதிமுறைகளுக்கு ஏற்ப 3ஆம் வாரண்ட் அதிகாரி ஹெங் பாதுகாப்பு உத்தியைப் பயன்படுத்தி தரையிறங்கியதால் கடுமையான காயங்களைத் தவிர்க்க முடிந்ததோடு தரைஇறங்கிய தாக்கத்தையும் குறைக்க முடிந்தது.
சென்ற ஆண்டு நடந்த அணிவகுப்பு சாகசத்தின்போது காற்றின் நிலவரம் திடீரென எதிர்பாரா வகையில் மாறிவிட்டதாக அந்தக் குழு கண்டது.
முந்தைய ஒத்திகைகளில் இருந்ததைவிட ரெட் லயன்ஸ் வீரர்கள் வானில் அதிக தடுமாற்றத்தை அனுபவித்தனர் என்றும் குழு தெரிவித்தது.
3ஆம் வாரண்ட் அதிகாரியான ஜெஃப்ரி ஹெங் நன்கு குணமடைந்துவிட்டார். மீண்டும் அவர் பயிற்சியில் ஈடுபட மருத்துவ ரீதியில் பொருத்தமானவர் என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அவர் இந்த ஆண்டின் தேசிய நாள் அணிவகுப்பு ஒருங்கிணைந்த பயிற்சிக்கான ஒட்டுமொத்த வான்குடை வீரராகக் கலந்துகொள்வார் என்றும் சிங்கப்பூர் ஆயுதப்படைகள் அறிக்கையில் தெரிவித்தன.
மறுபரிசீலனைக் குழுவின் பரிந்துரையை அடுத்து ரெட் லயன்ஸ் வான்குடை சாகச பயிற்சி செயல்திட்டங்களுக்கான மேம்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி கொவிட்-19 காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தேர்ச்சி மேம்பாட்டுச் செயல்திட்டம் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கி இருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட வான்குடை சாகச ஆயத்த பயிற்சி; தேசிய நாள் பேரணிக்கான பயிற்சிகள்; தரையிறங்கும் பகுதி விரிவாக்கம், பார்வையாளர்களிடம் இருந்து அதிக தொலைவு ஆகியவை மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளில் உள்ளடங்கும் என்று ஆயுதப்படைகள் தெரிவித்தன.
இந்த ஆண்டு அணிவகுப்பு பாடாங்கில் நடக்கும்.
ரெட் லயன்ஸ் குழு கடந்த மார்ச் மாதம் பயிற்சியைத் தொடங்கி விட்டது.
ஜூன் மாதம் முதல் தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதி நடக்கும் தேசிய நாள் பேரணி வரை தீவிரமான ஒத்திகைகள் தொடரும்.
dhurga@sph.com.sg
பயிற்சி நடைமுறைகளில் குறைபாடுகள் இல்லை; மறுபரிசீலனைக் குழுவின் பரிந்துரைகள்