சிறகுடைந்து கடும் துன்பத்துக்கு உள்ளான ஆந்தை கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் தானா மேரா கோஸ்ட் சாலையில் மிகவும் மோசமான நிலையில் இருந்த அந்த ஆந்தையை அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவர் கண்டார்.
அந்த ஆந்தை வனவிலங்கு மறுவாழ்வுக்கான தேசிய பூங்கா மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு நிர்வாகக் குழுவின் இயக்குநர் ஏட்ரியன் லூ கூறினார்.
ஆந்தையின் சிறகுப் பகுதியில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்ததாகவும் அது கவலைக்கிடமாக இருந்ததாகவும் குணமடையும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் டாக்டர் லூ தெரிவித்தார். எனவே, அது கருணைக் கொலை செய்யப்பட்டதாக அவர் கூறினார். காயமடைந்த ஆந்தைகளைப் பார்த்தால் அதை அவ்விடத்திலிருந்து நகர்த்தாமல் உடனடியாக தேசிய பூங்காக் கழகத்தின் விலங்கு உதவி மையத்துடன் தொடர்புகொள்ளும்படி அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.