சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக மருத்துவமனையில் சேரும் மக்களின் எண்ணிக்கை மார்ச் 5ஆம் தேதி முதல் எட்டு வார காலமாகவே அதிகரித்து வந்து உள்ளது.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதிக்கும் 29ஆம் தேதிக்கும் இடையில் 568 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 15 பேர் தீவிர கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டனர்.
ஏப்ரல் 2ஆம் தேதிக்கும் 29ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நான்கு வார காலத்தில் 47 நோயாளிகள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
இந்த எண்ணிக்கை, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 43ஆக இருந்தது. ஏப்ரல் மாதக் கடைசி வாரத்தில் சராசரியாக ஒருநாளில் கொவிட்-19 நோயாளிகள் 317 மருத்துவமனை படுக்கைகளில் சேர்ந்ததாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் சராசரியாக அவர்கள் 180 படுக்கைகளை எடுத்துக்கொண்டனர். அதே வாரத்தில் 22,651 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
அந்த எண்ணிக்கை, முந்தைய வாரத்தைவிட 20 விழுக்காட்டுக்கும் குறைவு என்றாலும் ஒப்பிட்டுப் பார்க்கையில் அது இன்னமும் அதிகமாகவே இருக்கிறது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகவில்லை என்று குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேருக்கு வயது 60க்கும் கீழ்.
சளிக்காய்ச்சல் நோய் காரணமாக ஏற்படக்கூடிய மரண எண்ணிக்கையைவிட இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
கொவிட்-19க்கு முன்பு சளிக்காய்ச்சல் காரணமாக ஒவ்வொரு மாதமும் சுமார் 50 பேர் மரணமடைந்தனர். கொவிட்-19 தொற்று அதிகரித்ததால் பலதுறை மருந்தக நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடியது.
ஏப்ரல் மாத முதல் மூன்று வாரங்களில் நாள் ஒன்றுக்கு 3,000க்கும் மேற்பட்டவர்கள் பலதுறை மருந்தக சிகிச்சையை நாடினர்.
இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கிற்கும் அதிகம்.

