நிருபர்: ரச்சனா வேலாயுதம்
கொவிட்-19 தொற்றுநோய்க் காலத்தில் மக்களின் மனநலனைக் கட்டிக்காக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட மோல்மின்-கேர்ன்ஹில் வட்டாரத்தின் சிறிய தொண்டூழியர் குழு இப்போது பெரிய அளவில் வளர்ந்து, அந்த வட்டாரத்தில் உள்ள சமூக, சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க பல முயற்சிகளை எடுத்துவருகிறது.
தொற்றுநோய்க் காலத்தில் தனிமையில் இருந்த பலரும் மனநலச் சவால்களை எதிர்கொண்டதை அறிந்த மோல்மின்-கேர்ன்ஹில் தொண்டூழியர்கள், மனநலத் திட்டத்தை உருவாக்கி மனநலம் தொடர்பான பல கலந்துரையாடல்ளை நடத்தினர்.
தொகுதியில் உள்ள சில வட்டாரங்களில் மட்டும் செயல்பட்ட அந்தத் திட்டம் கடந்த ஆண்டுகளாக பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், தொடர்பு, தகவல் அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ ஆகியோர் சனிக்கிழமையன்று (6 மே) கேன்ஹில் சமூக மன்றத்தில் நடந்த தொகுதிச் சுற்றுலாவின்போது இம்முயற்சிகளையும் திட்டங்களையும் நேரில் கண்டனர்.
முதியோருக்காக நடத்தப்பட்ட ஓவியம், வண்ணம் தீட்டும் அங்கத்தில் கலந்துகொண்டனர். வட்டார குடியிருப்பாளர்களால் தொடங்கப்பட்ட 'கிரீன் மோக்கா' எனும் திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகள் அமைச்சர்களுக்கு விளக்கப்பட்டன.
கேம்பிரிட்ஜ் வட்டார நடைபாதை திறந்தவெளியில் இருப்பதால் வெயில் காலத்தில் நடப்பதற்குச் சிரமமாக உள்ளது.
இந்தச் சிக்கலைத் தீர்க்க அங்கு வசிக்கும் மக்கள் செடிகளால் ஓர் ஒதுங்கும் இடத்தை உருவாக்கியுள்ளனர்.
அதே இடத்தில் மழை பெய்யும் நேரங்களில் வெள்ளம் பெருகி வந்ததால் செடி கொடிகளை வைத்து ஒரு தடுப்பு அமைக்கப்பட்டது.
அந்த தொண்டூழியக் குழு, குடியிருப்புப் பேட்டைகளின் அடுக்குமாடி கீழ்த்தளங்களையும் புதுப்பித்து, சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைகளை அமைத்துள்ளது. அந்தக் காலியான இடங்களைப் பசுமை மையம் போன்ற இடமாக மாற்றி அமைக்க குழு தொடர்ந்து முயன்று வருகிறது.
மக்களால் தொடங்கப்பட்ட இத்திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்கு எந்தெந்த வகையில் உதவும் என்பதை எடுத்துச் சொல்லி அவற்றின் அவசியத்தை அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
"தங்கள் சமூகத்தில் பிரச்சினையைக் கண்டு அதை தீர்க்க முன்வந்த இவர்களை நாம் தொடர்ந்து ஆதரிப்போம். சமூகத்துடன் ஒன்றிணைந்து நடத்தப்படும் திட்டங்கள் இவர்களின் முயற்சியால் நீண்ட காலத்திற்கு நிலைக்கும்.
"மனநல சேவைகளையும் 'மோக்கா' திட்டங்களையும் மற்ற குடியிருப்பாளர்களுக்குக் கொண்டுசெல்ல நாம் தொண்டூழியர்களுடன் சேர்ந்து தொடர்ந்து முயல்கிறோம்," என்றார் திரு ஆல்வின் டான்.