பொருத்தமான மாற்று இடங்களைக் காண போராடுவதாக தொழில் நடத்துவோர் கூறுகிறார்கள்
ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தில் இரவுநேர கேளிக்கை விடுதிகளை நடத்துவோர் மாற்று இடங்களைக் காண தாங்கள் போராடுவதாகக் கூறுகிறார்கள்.
அந்தக் கட்டடத் தொகுதியில் 2023 ஜூலைக்கு அப்பால் பொதுப் பொழுதுபோக்கு விடுதிகளை நடத்துவதற்கு தடைவிதிக்கக்கூடிய ஒரு காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது என்றாலும்கூட அவர்கள் இவ்வாறு கருத்து கூறுகிறார்கள்.
ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடங்களில் இரவுநேர கேளிக்கை விடுதிகளை நடத்துவதற்குப் பதிலாக குடும்ப உணவகங்கள், கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், உடலுறுதி நிலையங்கள் போன்றவற்றை நடத்தும் தொழில்களுக்கு மாறிக்கொள்ளலாம் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடங்களில் செயல்படும் இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்கான பொதுப் பொழுதுபோக்கு உரிமங்கள் 2023 மே 31க்குப் பிறகு புதுப்பிக்கப்படமாட்டா என்று சென்ற ஆண்டு ஜூலை மாதம் அந்தச் சொத்து உரிமையாளர்களிடத்திலும் தொழில் நடத்துவோரிடத்திலும் காவல்துறை தெரிவித்தது.
இரவு விடுதிகளை நடத்துவோரும் சிங்கப்பூர் இரவுநேர பொழுதுபோக்குத் தொழிலர் சங்கமும் தெரிவித்த கருத்துகளை அடுத்து ஏப்ரல் 13ஆம் தேதி காவல்துறை ஓர் அறிவிப்பை விடுத்தது.
ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட காலக்கெடு ஜூலை முடிவு வரை நீட்டிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்து இருக்கிறது.
இதனிடையே, ஆர்ச்சர்ட் டவர்சில் இரண்டு மதுபானக் கடைகளை நிர்வகிக்கும் ஹாரி என்ற 58 வயது ஆடவர் இது பற்றி கருத்து கூறுகையில், "கடந்த 25 ஆண்டுகளாக நாங்கள் இரவுநேர விடுதிகளை நடத்தி வருகிறோம்," என்று தெரிவித்தார்.
"உணவகங்களை எப்படி நடத்துவது என்பது எல்லாம் எங்களுக்குத் தெரியாது. இப்போது என்னுடைய மதுபானக் கூடங்களை உணவகங்களாக மாற்றும் வசதியும் இல்லை.
"உணவகத் தொழிலுக்கு மாறிக்கொள் என்று சொல்வது கடையை மூடிவிட்டுப் போங்கள் என்று சொல்வது போன்றதுதான்," என்று அவர் கூறினார்.
சென்ற ஆண்டு முதலே மாற்று இடங்களைத் தான் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தில் இரவுநேர விடுதிகளை நடத்துவோர் தங்கள் தொழிலை பொருத்தமான இதர வர்த்தக கட்டடங்களுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இருந்தாலும், கேப்பிட்டலேண்ட் போன்ற நிலச் சொத்துக் குழுமங்கள் தங்களுடைய கட்டடங்கள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதாகக் கூறுகின்றன.
ஆர்ச்சர்ட் டவர்சில் விடுதிகளை நடத்துவோர், தங்கள் இடத்தை வேறு பயனீட்டிற்கு அனுமதிக்கும்படி கேட்டு மனு செய்யலாம் என்ற அந்தப் பேச்சாளர், என்றாலும் விண்ணப்பங்கள் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பொதுவாக புதிய இரவுநேர கேளிக்கை விடுதிகள் குடியிருப்புக் கட்டடங்களுக்கு அருகே அனுமதிக்கப்படுவதில்லை.
அல்லது ஒரு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பவில்லை என்றால் அந்த வட்டாரத்தில் அத்தகைய தொழிலையும் நடத்த முடியாது.
ஆர்ச்சர்ட் டவர்சில் தொழில் நடத்துவதற்கான குத்தகைகளில் அண்மையில் தான் கையெழுத்திட்டதாகக் கூறும் திரு ஹாரி, அந்தக் குத்தகை 2025ல் முடியும் வரை அங்கேயே தொழில் நடத்த தனக்கு அனுமதி கிடைக்கும், அல்லது அந்தக் குத்தகைகளை முன்னதாகவே முடித்துக்கொண்டு வெளியேற கொஞ்சம் உதவி கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

