தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி கரிமக் கழிவற்ற நிலையைச் சாதிக்கத் தோதாக வழிகாட்டி உத்தி ஒன்றை அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தரங்களுக்கு ஏற்ப உருவாக்க திட்டமிடுகிறது.
கரிமக் கழிவற்ற நிலையைச் சாதிக்க சிங்கப்பூர் நிர்ணயித்துள்ள 2030 இலக்கை எட்ட பள்ளிக்கூடங்கள் ஆயத்தமாகி வரும் வேளையில் தெமாசெக் அந்த உத்தியைக் கையில் எடுக்கிறது.
சிங்கப்பூரின் இலக்குகளை ஒட்டி, 2030ஆம் ஆண்டுக்கும் அதற்கு அப்பாற்பட்ட காலத்திற்கும் உரிய சுற்றுச்சூழல் இலக்குகளைத் தீர்மானிக்கவும் 2050ல் கரிமக்கழிவற்ற நிலையைச் சாதிப்பது பற்றியும் கல்லூரி ஆராய்ந்து வருவதாக அதன் நீடித்த நிலைத்தன்மை துறைத் தலைவர் வாலஸ் லிம் தெரிவித்தார்.
கல்லூரியின் இப்போதைய தண்ணீர், எரிசக்திப் பயனீடு, கழிவுகள், நேரடியாக, மறைமுகமாக கல்லூரி வெளியாக்கும் கரிம அளவு ஆகியவற்றை அளவிட ஆலோசனை நிறுவனம் ஒன்றை கல்லூரி நியமிக்கும்.
இந்தத் திட்டத்தில் ஊழியர்களும் மாணவர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அரசாங்கத்தின் ஜிபிஸ் என்ற இணைய வாசலில் வெளியான ஒப்பந்தப் புள்ளி ஆவணங்கள் மூலம் தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.