அனுஷா செல்வமணி
கடல்துறை நாளுக்கு நாள் அதிக மாற்றம் கண்டு வரும் ஒரு துறையாக விளங்கிவருகிறது. இளையர்களுக்கு அத்துறையில் காத்திருக்கும் வாய்ப்புகள், தற்போதைய காலகட்டத்தில் அத்துறையின் இன்றியமையாமை, அத் துறையில் இளையர்களின் பங்களிப்பு போன்றவற்றைப் பற்றி அறிந்து வந்தது இவ்வார இளையர் முரசு.
கடுமையான உழைப்பு, பள்ளியில் கற்றுக்கொள்ளும் புத்தாக்கத் திறன் ஆகிய பண்புகளால் வருங்காலக் கடல்துறையில் திறம்படப் பணிபுரிய முடியும் என அண்மையில் சிங்கப்பூர் கடல்துறை வாரத்தில் கலந்துகொண்ட கதிரவன் சுப்பிரமணியம், கேஷா மார்டினி ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
கடல்துறையில் பெண்கள் சாதிக்கலாம்
கடலோரத் துறையில் பணிபுரியும் தன் தந்தையைக் கண்டு ஏற்பட்ட ஆர்வத்தால் 21 வயது கேஷா மார்டினி (இடது), அதே துறையில் கால் பதிக்க முடிவெடுத்தார். அதற்குத் தேவையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
உலக வெப்பமயமாதல் காரணமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீடித்த நிலைத்தன்மை போன்ற முக்கிய அம்சங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதால் கடல்துறையில் பணிபுரிவதற்கு இது சிறந்த ஒரு காலகட்டம் எனக் கருதினார் கேஷா.
தொடக்கத்தில் பலதுறைத் தொழிற்கல்லூரி யில் இயந்திரப் பொறியியல் துறையில் பட்டயம் பெற்றபோதும் தற்போது பல்கலைக்கழகத்தில் கடல் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டத்துக்காக பயின்று வருகிறார்.
ஆணாதிக்கமுள்ள ஒரு துறையில் பெண்களால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற சந்தேகத்திற்கு விளக்கமளித்த கேஷா, "இந்தத் துறையில் ஆண்களின் பங்களிப்புக்கு நிகராக பெண்கள் பணியாற்றப் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன," என்று குறிப்பிட்டார்.
கடல்துறையில் வேலை வாய்ப்புகள் குறைவு என்று நம்பும் சிலரின் கருத்தைச் சுட்டிய கேஷா, கடல்துறை ஆராய்ச்சியாளர், கடல்துறை வணிகப் பொறியாளர், கப்பல் நிர்வாகி, கடல்துறை வழக்கறிஞர், கடல்துறை விளம்பர அதிகாரி எனக் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகளை இளையர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம் என்றார்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கேஷா, பள்ளிக்கு அப்பாற்பட்டு திறன்களை மேன்மேலும் வளர்த்துக்கொள்ளும் ஆர்வத்தில் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் கீழ் சிங்கப்பூர் கடல்துறை இளையர் தூதராகவும் இருக்கிறார்.
சிங்கப்பூர் கடல்துறை வாரத்தில் கலந்துகொண்டதன் மூலம் இத்துறையில் பணிபுரியும் முழுநேர நிபுணர்களைச் சந்தித்ததுடன் கொள்கலன் கப்பலைப் பார்ப்பதற்கான அரிய வாய்ப்பையும் பெற்றதை எண்ணித் தான் மகிழ்ந்ததாகக் கூறினார் கேஷா.
எதிர்காலத்தில் கடல்துறை ஆராய்ச்சியில் முத்திரை பதிக்கும் குறிக்கோளுடன் உள்ள கேஷா, அடுத்து இதே துறையில் முதுகலைப் பட்டம் பயிலத் திட்டமிட்டுள்ளார்.
அண்ணன் காட்டிய வழி
கேஷாவைப் போலவே கடல்துறையில் தன் வாழ்க்கைத்தொழிலை அமைத்துக்கொள்ள விரும்புகிறார் கதிரவன் சுப்பிரமணியம், 25, (வலது).
எதிர்காலத்தில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சிறந்து விளங்கு வதற்கான படிப்பை மேற்கொள்ளலாம் என்று நண்பர் வட்டம் தடுமாறியபோது, கதிரவனுக்குத் தன் அண்ணனின் ஆதரவு கைகொடுத்தது.
புதிதாக உருவாக்கப்பட்ட கப்பல்களுக்கு மின்பொறியாளராக இருக்கும் அண்ணன் தமது வேலையிட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் அண்ணனின் சக ஊழியர்களுடன் ஒன்றுகூடும் சமயங்களில் வேலையைப் பற்றிய அவர்களின் கலந்துரையாடல்களைக் கேட்டு வளர்ந்த கதிரவனுக்கு, கடல்துறையில் பணிபுரிய தீவிர நாட்டம் ஏற்பட்டது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பயிலும் கதிரவன், இயந்திரப் பொறியியல் பாதையைத் தேர்ந்தெடுத்ததுடன் கடற்படை கட்டடக்கலையிலும் கடல்துறைப் பொறியியலிலும் நிபுணத்துவம் பெற்று வருகிறார்.
கேஷா கூறியதுபோல, இத்துறையில் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன என்றார் கதிரவன். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளும் இப்பொழுது கடல்துறையில் உள்ளன என்றார் இவர்.
துறையை ஒட்டிய திறன்களை வளர்த்துக்கொள்ளும் முனைப்பில் கதிரவன் தன் கோடைக்கால விடுமுறையின்போது வேலைப்பயிற்சி மேற்கொண்டார்.
வர்த்தகரீதியான அனுபவத்தைப் பெற்ற இவர், கடல்துறை பன்முகத்தன்மை கொண்ட ஒரு துறை என்பதை அறிந்துகொண்டார். சென்றாண்டு சிங்கப்பூர் கடல்துறை இளையர் தூதராக அங்கீகரிக்கப்பட்ட கதிரவன், தொழிலதிபர்களுடன் இணைக்கப்பட்டார்.
துறை சார்ந்த சந்தேகங்களைத் தன் உடன்பிறப்பிடம் கேட்டு எளிதில் தீர்த்துக்கொள்ளவும் முடிகிறது என்றார்.
கடல்துறையில் அமைந்துள்ள தற்போதைய வாய்ப்புகளை ஆராய்ந்து நிரந்தர வேலை ஒன்றின் மூலம் துறையில் மாற்றம் ஏற்படுத்தும் லட்சியத்தைக் கொண்டுள்ளார் கதிரவன்.
படங்கள்: சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம், கேஷா மார்டினி

