மோசடிகள் போன்ற இணையக் குற்றங்களையும் மற்றவர்களின் பாலியல் நடவடிக்கைகள் தொடர்பான படங்களையும் காணொளிகளையும் அனுப்பும் குற்றங்களையும் தடுக்கும் வகையில், அத்தகைய செயல்களை ஆதரிக்கும் தீங்கிழைக்கும் செயலிகளை அகற்றுவதற்கு அரசாங்கத்துக்கு விரைவில் முழு அதிகாரம் வழங்கப்படலாம்.
நாடாளுமன்றத்தில் இதன் தொடர்பில் இணைய குற்றவியல் தீங்குகள் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டால், சந்தேகநபர்களால் குற்றச்செயல்கள் புரிய உதவி செய்யும் செயலிகளை விற்கும் தனிநபர்கள், நிறுவனங்கள், இணைய சேவை நடத்துநர்கள், செயலி விற்பனைக் கடைகள் ஆகியவற்றுக்கு அவற்றின் விற்பனையை நிறுத்தவும் செயலிகளை அகற்றவும் அரசாங்கம் உத்தரவிட அனுமதிக்கும்.
தேசிய பாதுகாப்பு, இன, சமய நல்லிணக்கம், தனிநபர் பாதுகாப்பு, வன்முறையைத் தூண்டுதல், பாலியல் முறைகேடு பற்றிய தகவல்களை விநியோகித்தல், சட்டவிரோதமாக கடன் கொடுத்தல், செயற்கை போதைப் பொருள், கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் ஆகியவை தொடர்பான குற்றச்செயல்களும் மசோதாவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில் ஐந்து விதமான அரசாங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம். முதலாவது, தொடர்பை நிறுத்தும் உத்தரவு. இதைக் கொண்டு இணையத்தில் உலாவரும் குற்றவியல் உள்ளடக்கமுடைய பதிவை அகற்றமுடியும். அதனால் அது சிங்கப்பூரில் கிடைக்காமல் நிறுத்தலாம்.
அடுத்ததான, முடக்கும் உத்தரவால், ஃபேஸ்புக், டிக்டாக், வாட்ஸ்அப், வீசெட் போன்ற இணையத் தளங்களில் குறிப்பிட்ட ஒரு பதிவை முடக்க முடியும். அதன் மூலம் சிங்கப்பூரர்களை அதைப் பார்ப்பதிலிருந்து தடுக்கலாம்.
கணக்கு கட்டுப்பாடு உத்தரவால், சிங்கப்பூரில் இணைய சேவை நடத்துநர் சிங்கப்பூரில் தொடர்புகொள்ள பயன்படுத்தும் கணக்கை நிறுத்தச் சொல்லலாம்.
அணுகல் தடுப்பு உத்தரவை பெறும் இணைய சேவை நடத்துநர், சிங்கப்பூர் மக்கள் தனது தளத்தை அணுகுவதைத் தடுக்க வேண்டும்.
செயலி அகற்றும் உத்தரவைப் பெறும் செயலி விற்பனைக் கடை சிங்கப்பூரிலிருந்து அதைப் பதிவிறக்கம் செய்வதைத் தடுக்க வேண்டும்.
அவ்வாறு அரசாங்க உத்தரவைப்பெறும் தனிநபர்களும் நிறுவனங்களும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கலாம்.
அந்தப் பரிசீலனைக் குழுவில், அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் அதிபரால் நியமிக்கப்படும் மாவட்ட நீதிபதி அல்லது குற்றவியல் நடுவர் அங்கம் வகிப்பார்.
தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதா, அரசாங்கத்துக்கும் இணைய சேவைகள் வழங்குவோருக்கும் இடையே உள்ள பங்காளித்துவத்தைப் பலப்படுத்தும் என்றும் இதனால், மோசடிகள், இணையக் குற்றங்கள் போன்றவற்றை கூட்டமாகத் தடுக்கலாம் என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
இணையவெளி, குற்றவாளிகளால் அதிக அளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற குற்றங்களைத் தடுத்து நிறுத்தவும் இனி இம்மாதிரியான குற்றங்கள் மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்வதும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று என்றும் உள்துறை அமைச்சு வலியுறுத்தியது.