மலேசியாவின் ஆயுதப் படைத் தலைவர் ஜெனரல் முகம்மது அப்துல் ரஹ்மான் சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டுள்ளார். அவரை தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று பிற்பகல் தற்காப்பு அமைச்சின் தலைமையகத்தில் சந்தித்துப் பேசினார். இருநாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள தற்காப்பு ஒத்துழைப்பை வலப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினர். ஜெனரல் முகம்மதின் மூன்று நாள் பயணம் நேற்று முன்தினம் தொடங்கியது. அவரது சிங்கப்பூர் பயணம் இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பிரதிபலிப்பதாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.
பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக இருநாடுகளின் ராணுவங்கள் அடிக்கடி ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்வதாக அமைச்சு தெரிவித்தது.
இருநாடுகளின் ஆயுதப் படைகள் ஒன்றிணைந்து நடத்தும் பயிற்சிகள், நிபுணத்துவப் பரிமாற்றங்கள் ஆசியான் தற்காப்பு அமைச்சர்களுக்கான கூட்டம் போன்ற பலதரப்பட்ட தளங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
ஒன்றிணைந்து நடத்தப்படும் இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் இருநாடுகளின் ராணுவங்களுக்கு இடையே பரஸ்பர புரிந்துணர்வும் நிபுணத்துவ நட்புறவும் மேம்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சு கூறியது.
நேற்று தற்காப்பு அமைச்சின் தலைமையகத்தில் ஜெனரல் முகம்மது மரியாதைக் காவல் அணியைப் பார்வையிட்டார். அத்துடன் சிங்கப்பூரின் தற்காப்புப் படைத் தலைவர் ரியர்-அட்மிரல் ஏரன் பெங்கையும் ராணுவத் தலைவர் மேஜர்-ஜெனரல் டேவிட் நியோவையும் சந்தித்தார். ஜூரோங் முகாமில் உள்ள மூன்றாவது சிங்கப்பூர் பிரிவையும் அவர் சென்று பார்ப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர்-மலேசியா ஆயுதப் படைகள் இணைந்து நடத்தும் வருடாந்திர ராணுவப் பயிற்சியான 'செமாங்காட் பெர்சத்து' பயிற்சிக்கு ஜெனரல் முகம்மது இணைத் தலைவராகச் செயல்படுவார்.