புதிய சிங்கப்பூர் கலைப் பல்கலைக்கழகத்தில் 2024ல் சேரும் மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு நேரடிப் பயிற்சி செயல் திட்டத்திலாவது கலந்துகொள்ள வேண்டும். அவர்களைப் பரந்த உலகில் வேலை பார்க்கும் அளவிற்கு ஆயத்தமாக்கும் கல்விப் பாடங்களை அவர்கள் படித்து முடிக்க வேண்டும்.
ஒரு பொதுவான பாடத்திட்டத்தின் அங்கமாக இருக்கக்கூடிய பயிற்சிப் படிப்புகளையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் குவாக் கியான் வூன், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
தகவல் தொடர்பு, மின்னிலக்கக் கல்வி, சமூகப் பிரச்சினைகள் போன்ற படிப்பு கள் அவற்றில் உள்ளடங்கும்.
அந்தப் புதிய பல்கலைக்கழகம் கலைகளில் ஒருமித்த கவனம் செலுத்தும் சிங்கப்பூரின் முதலாவது பல்கலைக்கழகமாகும்.
அது அடுத்த ஆண்டில் இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை கலை பட்டப்படிப்புகளில் 700க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும்.
அது தனது சின்னத்தை நேற்று வெளியிட்டது.

