பெரும் செல்வந்தர்களின் முதலீடுகளை நிர்வகிக்கின்ற குடும்ப அலுவலகங்கள், கடந்த ஆறு ஆண்டு காலத்தில் ஒரு குடியிருப்புச் சொத்தைக்கூட வாங்கவில்லை என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறினார்.
ஆகையால், குடும்ப அலுவலகங்களால் சிங்கப்பூரின் தனியார் வீட்டுச் சந்தையில் எந்தவொரு தாக்கமும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுக்காரர்கள் வாங்கிய தனியார் குடியிருப்புச் சொத்துகளின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துள்ளது.
2021ல் 20 விழுக்காடாக இருந்த அந்த அளவு, கடந்த சில ஆண்டுகளில் சுமார் 3% முதல் 4% ஆக இறங்கி இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றில் இருந்து விடுபட்டு இருக்கும் சூழலில் அந்த விகிதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 7% ஆக இருந்து வருகிறது என்றாரவர்.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் தனியார் வீடுகளின் விலையும் வாடகையும் மிகவும் அதிகரித்து இருந்தன.
வெளிநாட்டுக் கொள்முதல்காரர்களின் விகிதம் சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் 3.1% ஆக இருந்தது. இது இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 6.9% ஆக அதிகரித்து இருக்கிறது என்று நகர மறுசீரமைப்பு ஆணைய புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
சிங்கப்பூரில் 2021ஆம் ஆண்டு முடிவுவாக்கில் 700 தனிக் குடும்ப அலுவலகங்கள் செயல்பட்டன என்பது சிங்கப்பூர் நாணய ஆணையம் மூலம் தெரியவருகிறது.
அவற்றில் சுமார் 200 அலுவலகங்கள், உள்ளூர் சொத்துகளில் முதலீடு செய்வதற்கு ஏதுவாக சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் வரி ஊக்குவிப்புகள் கேட்டு விண்ணப்பித்து இருக்கின்றன.

