அனைத்துலக அளவில் சவால் விடுக்கும் பருவநிலை மாற்றம் விவகாரம் போலவே மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றமும் முக்கியமாகக் கருதப்படவேண்டும். அத்துடன் தொடர்புகளைக் கண்டறிவதிலும் தீர்வுகளை முன்வைப்பதிலும் கூடுதல் துணிவுடன் கல்வியாளர்கள் செயல்படவேண்டும் என்றார் வர்த்தகர் ஹோ குவோன் பிங்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மக்கள்தொகை விவகாரங்கள் தொடர்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் அவர் பேசியிருந்தார்.
"மனித இனம் நீடிப்பதற்குக் கட்டாயமாக நமது மொத்த பிறப்பு விகிதம் (டிஎஃப்ஆர்) அதிகரித்து தேசிய தற்காப்புக்கு ஈடாக உத்திபூர்வ முக்கியத்துவம் பெற்றதாக அது கருதப்பட்டாலும் எண்ணங்களில் அடிப்படை மாற்றம் தேவைப்படுகிறது. அரசாங்கத்தால் மட்டுமல்லாமல் தொழில்துறை, வீடுகள் போன்றவையும் இந்த மாற்றத்தில் தீவிரம் காட்டவேண்டும்," என்றார் அவர்.
குழந்தைப் பிறப்பு தொடர்பில் தந்தையர் விடுப்பு அண்மையில் நான்கு வாரங்களாக இரட்டிக்கப்பட்டது. இருப்பினும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் ஒரு தம்பதிக்கு இந்த மாற்றம் கணிசமாக இல்லாமல் போகலாம் என்றார் திரு ஹோ.
மாநாட்டின் தொடக்க உரை நிகழ்த்திய பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, சிங்கப்பூரின் 'டிஎஃப்ஆர்' வரலாறு காணாத அளவுக்கு 2022ல் 1.04க்குச் சரிந்ததாகவும் முன்னுரைப்பான 1.05ஐக் காட்டிலும் இது குறைவு என்றும் குறிப்பிட்டார்.
குடியிருப்பாளர் ஊழியர் அணியின் வளர்ச்சியும் மெதுவடைந்துவருகிறது. 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் 18 விழுக்காட்டினர். நிரந்தரவாசிகளையும் வெளிநாட்டவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் இதே வயதுடையோர் 13 விழுக்காட்டினர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் நிலையற்றதாக இருந்துவரும் மிகப் பெரிய வெளிநாட்டு ஊழியர் சமூகத்திலிருந்து எதிர்கால நிரந்தரவாசிகளையும் குடிமக்களையும் தேர்ந்தெடுக்கலாம்.
குறிப்பிட்ட தயார்படுத்தும் ஒரு திட்டத்தின் மூலம் சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக அதிகச் செயல்திறத்துடன் விளங்கிவருவோரை இவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்று திரு ஹோ ஆலோசனை கூறினார்.
பிரதமர் அலுவலகத்தில் உத்திபூர்வக் குழுமத்தின் தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவை மேற்பார்வையிடும் திருவாட்டி இந்திராணி, நாட்டின் முதுமையடையும் சமூகத்தையும் குறைவான பிறப்பு விகிதத்தையும் சமாளிக்க அரசாங்கம் குறிப்பாக இரு உத்திகளைக் கையாள்கிறது என்றார்.
குழந்தைப் பராமரிப்பு தொடர்பில் கூடுதல் உதவி வழங்கும் வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதுடன் மேலும் அதிகமான பாலர் பள்ளி இடங்களையும் தொடர்ந்து உருவாக்கித் தரும் என்றார் அவர்.
இதற்காக நிறுவனங்கள் வேலை உருமாற்றம் தொடர்பில் தத்தம் நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்ய வேண்டும். வேலையில் செலவிடும் நேரத்துக்குப் பதிலாக விளைவுகளில் முதலாளிகள் கவனம் செலுத்தவேண்டும்.
முதுமை என்பது நீண்ட ஆயுளுடன் தொடர்புபடுத்தப்படவேண்டும். சுகாதாரப் பராமரிப்பு, பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றைக் காட்டிலும் முதுமையால் விளையும் பலன்களை எண்ணிப் பார்க்கவேண்டும் என்றார் அமைச்சர் இந்திராணி.

