ஆ. விஷ்ணு வர்தினி
சிங்கப்பூரின் சுகாதாரச் சூழல் மீண்டெழும் நிலையில் மருத்துவப் பராமரிப்பு ஊழியர்களின் உரிமைகள், நலன் ஆகியவற்றைக் காக்கும் முயற்சிகள் தொடர்ந்து அமலாக்கம் கண்டு வருகின்றன.
ஆனால், அதிக வேலைப் பளு, வேலைக் களைப்பு, சீரில்லாத வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவை தொடர்ந்து ஊழியர்களை உறுத்தும் சிக்கல்கள் என சன்லவ் பராமரிப்பு இல்லத்தின் தலைமைத் திட்ட அதிகாரி திரு ராஜ மோகன் கூறினார்.
நேற்றுக் காலை இடம்பெற்ற அதிபர் ஹலிமா யாக்கோப்பின் தேநீர் உபசரிப்பு நிகழ்வில் திரு ராஜ மோகன் உட்பட கொவிட்-19 சூழலில் முன்னிலையில் இருந்து பணிபுரிந்த தாதிமை இல்லச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் 50 பேர் கலந்துகொண்டனர். #செர்விங்எஸ்ஜி முயற்சியின் ஐந்தாவது அங்கமான இந்நிகழ்வு, அதிபர் மாளிகையில் நடந்தேறியது.
சுற்றுச்சூழல் சேவை ஊழியர்கள், பொதுச்சேவை விநியோக ஊழியர்கள், கொவிட்-19 செயல்பாடுகளைக் கையாண்ட அதிகாரிகள், ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரை #செர்விங்எஸ்ஜி திட்டத்தை முன்னிட்டு முன்னர் அதிபர் வரவேற்றிருந்தார். நாட்டு நலனில் முக்கியப் பங்காற்றும் அவர்களின் உழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இச்சந்திப்புகள் இடம்பெற்றன.
அண்மையில் மருத்துவப் பராமரிப்பு ஊழியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் முயற்சிகள் ஆலோசிக்கப்பட்டன. முறைகேடாக நடந்துகொள்ளும் அவசரகால உதவி தேவைப்படாத நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து நீக்கப்படும் காலம் விரைவில் வரலாம்.
இவ்வகையில் தொடர்ந்து அரசாங்கமும் ஆதரவு அமைப்புகளும் மருத்துவப் பராமரிப்பு ஊழியர்களின் தேவைகள் அறிந்து செயல்படுவது அவசியம் என்று திரு ராஜ மோகன் வலியுறுத்தினார். மனநல ஆதரவு அவர்களைத் தேடிவர வகைசெய்தல், வருத்தங்களை முன்வைக்க வழி அமைத்தல் ஆகியவை அதிகரிக்கும் என்பது அவரின் நம்பிக்கை.
"சமூகத்தினர் மருத்துவத் துறையின் பல்வேறு பணிகளுக்கு வெவ்வேறு அங்கீகாரத்தை வழங்குகின்றனர். ஆனால், அனைத்தும் அர்த்தம் மிகுந்தவை. அடுத்த தலைமுறையினரான இளையர்களை இத்துறைக்கு ஈர்ப்பது அவசியம். அதற்கு வேலை-வாழ்க்கை சமநிலை உள்ள சூழலும் தேவை," என்றார் திரு ராஜ மோகன், 62.

