துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான திரு லாரன்ஸ் வோங், 'ஜி7' நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றுள்ளார்.
பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகியவை 'ஜி7' நாடுகள் எனப்படும்.
அந்நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கித் தலைவர்களும் கலந்துகொள்ளும் மாநாடு ஜப்பானின் நீகதா நகரில் நடைபெறுகிறது.
அதில் கவனிப்பாளராகக் கலந்துகொள்ளும்படி சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை ஏற்று திரு வோங் சென்று உள்ளார்.
'ஜி20' நாடுகளின் கூட்டங்களில் சிங்கப்பூர் கவனிப்பாளராக அழைக்கப்படுவது வழக்கம் என்றாலும் 'ஜி7' மாநாட்டிற்கு அழைக்கப்படுவது அரிதான நிகழ்வு.
நேற்று தொடங்கிய அந்த மூன்று நாள் உச்சநிலை மாநாட்டில், ரஷ்ய-உக்ரேனியப் போர், நிதித்துறையில் நிலவும் நிச்சயமற்றதன்மை ஆகியவற்றுக்கு இடையில் உலகப் பொருளியலையும் விநியோகச் சங்கிலிகளையும் வலுப்படுத்தும் அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்.
வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையில் பொருளியல், நிதி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் அதில் கலந்துரையாடப்படும் என்று வெளியுறவு அமைச்சு கூறியது.
திரு வோங்குடன் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் சென்றுள்ளனர். இம்மாதப் பிற்பகுதியில் ஜப்பானில் நடைபெறும் ஆசிய வருங்காலம் குறித்த 28வது நிக்கேய் கருத்தரங்கில் கலந்துகொள்ள துணைப்பிரதமர் வோங் மீண்டும் ஜப்பான் செல்லவிருக்கிறார்.

