கருணாநிதி துர்கா
திருமதி மல்லிகா தட்சிணாமூர்த்திக்கு வயது 62.
வாழ்நாள் கற்றலின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகக் கூறும் இவர், அண்மையில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வணிகச் செயல்பாடு தொடர்பான பட்டயக்கல்வியை நிறைவுசெய்துள்ளார்.
பலதுறைத் தொழிற்கல்லூரிக் கல்விப் பயணத்தில் பல சவால்களைச் சந்தித்தாலும் தனது வயதை அவற்றுக்கான ஒரு காரணமாக இவர் ஒருபோதும் கருதவில்லை.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பட்டயம் பெற்றார் மல்லிகா.
ஒன்பது ஆண்டுகள் பெரியோர்க்கான கல்வி நிலையத்தில் பணிபுரிந்த இவர், 2020ல் ஓய்வுபெற்றார்.
பணிபுரிந்த காலத்தில் அவ்வப்போது பயிலரங்குகளுக்குச் சென்று தனது திறமைகளை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகக் கூறுகிறார் இவர்.
சமூகத்துடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பிய மல்லிகா, வேலைக் கண்காட்சி ஒன்றில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வணிகச் செயல்பாடு பட்டயக்கல்வியைப் பற்றித் தெரிந்துகொண்டார்.
"மீண்டும் வகுப்பறையில் பயில்வதில் பல சவால்களை எதிர்கொண்டேன். இருப்பினும் எனக்கு ஆதரவு அளித்துப் பலர் துணைநின்றனர்," என்று மல்லிகா கூறினார்.
அவருக்கும் அவருடன் பயின்ற மாணவர்களுக்கும் இடையே வயது இடைவெளி இருந்தாலும் அவ்விளையர்களுடன் ஒரு நல்ல பிணைப்பை உருவாக்க முடிந்ததாகக் கூறினார் மல்லிகா.
"இளைய தலைமுறையினரிடம் இருந்து கற்றுக்கொள்வதற்குப் பல அம்சங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்தேன்.
"தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நான் சந்தித்த சிக்கல்களைக் கையாள்வதற்கு அவர்கள் உதவினர்.
"மேலும், அவர்களுடன் உரையாடியது என்னை மாறுபட்ட முறையில் சிந்திக்கத் தூண்டியது," என்றார் மல்லிகா.
கடந்த ஓராண்டாக உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நூலகராகப் பணிபுரியும் இவர், முழுநேர வேலையுடன் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதில் சவால்களைச் சந்தித்தார்.
சற்று மனந்தளரும் போதெல்லாம் குடும்பத்தினர் தனக்கு உறுதுணையாக இருந்ததாகக் கூறினார் மல்லிகா.
மேலும், படிப்பதற்கு வயதை ஒரு தடையாகக் கருதாமல் தன்னைப்போல் மேலும் பலர் கல்வி கற்க முன்வருவர் என நம்புவதாகக் கூறினார்.
கல்வி வாய்ப்புகள் அனைத்து வயதினரையும் போய்ச் சேர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் இவர்.