ஆயுதம் ஏந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது துப்பாக்கிக் குண்டுகளில் இருந்து காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாக்கும் திறன்மிகு கொண்ட புதிய பாதுகாப்பு வாகனம் சிறப்பு செயல்பாட்டுத் தளபத்தியத்தில் (எஸ்ஓசி) சேர்க்கப்பட்டுள்ளது.
உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பும் காவல்துறையும் இணைந்து இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளன.
பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களில் அதிகாரிகள் விரைந்து செயல்படும்போது, பாதுகாப்பை அதிகரிக்க இந்த வாகனம் உதவும் என்று காவல்துறை திறன் உத்திப் பிரிவின் கண்காணிப்பா ளரான ராய் ஷபிக் ஆவ் கூறினார்.
"பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தலின்போது, இதனால் உள்ளே புகுந்து அச்சுறுத்தலை முறியடிக்க முடியும். பொது அறிவிப்பு அமைப்பு, சக்திவாய்ந்த விளக்குகள், அதிநவீன கேமராக்கள் போன்ற அம்சங்களையும் இந்த வாகனம் கொண்டுள்ளது," என்றார் அவர்.
இந்த வாகனத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை சிறப்பு செயல்பாட்டுத் தளபத்திய அதிகாரிகள் நேற்று செய்துகாட்டினர்.
துப்பாக்கி ஏந்தியவர்கள் ஒரு வணிக வளாகத்தை வளைத்து முற்றுகையிட்டனர். பலத்த துப்பாக்கிச்சூடு நடந்ததால் மற்ற காவல்துறை பிரிவுகளால் கட்டடத்திற்குள் நுழைய முடியவில்லை. எஸ்ஓசி அதிகாரிகள், இந்த வாகனத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி கட்டடத்துக்குள் நுழைந்து அச்சுறுத்தலை முறியடித்தனர்.
2019க்குப் பிறகு முதல் முறையாக நேற்று நேரடியாக நடத்தப்பட்ட காவல்துறை பணித்திட்ட கருத்தரங்கு, கண்காட்சியில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இந்த வாகனத்துக்கு முறையான அங்கீகாரம் அளித்தார்.
இந்த ஆண்டு கருத்தரங்கின் கருப்பொருள் 'நாட்டுக்கான எதிர்கால-தயார்நிலைப் படை', என்பதாகும். பொது ஒழுங்கு, பாதுகாப்பு சம்பவங்களுக்கு காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்துதல், முன்னிலை கண்காணிப்பை மேம்படுத்துதல், சேவை வழங்கல் - சமூக ஈடுபாட்டை மேம் படுத்துதல் ஆகியவற்றில் கருத்தரங்கு கவனம் செலுத்தியது.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடந்த கருத்தரங்கில் இவ்வாண்டு தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வந்த ஆளில்லா வானூர்தியை (டிரோன்) எதிர்கொள்ளும் தனது திறனையும் காவல்துறை அறிமுகப்படுத்தியது. 2020 முதல் ஆளில்லா வானூர்தியை கண்காணிக்கும் பல்வேறு தொழில்நுட்பங்களைக் காவல்துறை சோதனை செய்து வருகிறது.
ஆளில்லா வானூர்தி கண்டறியப்பட்டால் அதிகாரிகள் உணர்கருவிகள் மூலம் அதைக் கண்டு பிடிப்பார்கள். அதே நேரத்தில், தரையில் செயல்படும் அதிகாரிகள் அதை இயக்குபவர்களை கண்டுபிடித்து அதன் செயல்பாட்டை நிறுத்துவார்கள்.
தேவைப்பட்டால், அதை விசாரணைக்காக கையகப்படுத்துவதற்கு முன்னர், அதிகாரிகள் அதன் கட்டுப்பாட்டு சமிக்ஞையைச் சீர்குலைத்து அதை கீழே கொண்டு வரலாம்.
காவல்துறை ஆயுதங்களுக்காக உருவாக்கப்பட்ட தானியங்கி ஆயுதக் களஞ்சியம், காவல்துறை சேவைகளை மின்னிலக்க மயமாக்குதல் போன்ற காவல்துறையின் ஏனைய முயற்சிகளும் கருத்தரங்கு, கண்காட்சியில் இடம்பெற்றன.

