நோவாவேக்ஸ் கொவிட்-19 தடுப்பூசிக்கு 12 முதல் 17 வயதுடையவர்கள் திங்கட்கிழமை முதல் பதிவு செய்யலாம்.
பைசர்-பயோஎன்டெக்/கமிர்னாட்டி தடுப்பூசியைப் பெறுவதற்கு மருத்துவரீதியாகத் தகுதியில்லாத பதின் மவயதினர் அல்லது எம்ஆர்என்ஏ வகையைச் சாராத தடுப்பூசியைப் போட விரும்புவோர் தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் பரிந்துரைக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியை நிறைவுசெய்ய தற்போது நோவாவேக்ஸை தேர்வுசெய்யலாம்.
நோவாவேக்ஸ், நுவாக்ஸோவிட் என்றும் அழைக்கப்படுகிறது.
19 பொது சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்களில் ஒன்றில் முன்பதிவு செய்யலாம். மேல் விவரங்களுக்கு www.gowhere.gov.sg/vaccine என்ற இணையப்பக்கத்தைப் பார்க்கவும்.
இந்த வயதினருக்கு நோவாவேக்ஸ் தடுப்பூசியைப் பயன்படுத்த சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, கொவிட்-19 தடுப்பூசி குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதாக சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
12 வயதுக்கும் 17 வயதுக்கும் உட்பட்டவர்கள் குறைந்தபட்ச பாதுகாப்பைப் பெற நோவாவேக்ஸ் தடுப்பூசியின் மூன்று 'டோஸ்' களைப் பெற அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
"முதல், இரண்டாவது தடுப்பூசிகளுக்கு எட்டு வார இடைவெளி. இரண்டாவது, மூன்றாவது தடுப்பூசிகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட இடைவெளி ஐந்து மாதங்கள்," என்று அறிக்கை கூறியது.
"ஒருவர் முன்பு எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை மட்டுமே பெற்றிருந்தாலும் நோவாவாக்ஸ் தடுப்பூசியை காப்பூசியாக (பூஸ்டர்) போட்டுக்கொள்ளலாம்," என்று அது கூறியது.
பொதுவாக ஒப்பிடத்தக்க பெரியவர்களிடம் ஏற்படுத்திய ஆன்டிபாடி அளவைப் போன்றே 12 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களிடமும் நோவாவேக்ஸ் தடுப்பூசி உருவாக்கியுள்ளது. கொவிட்-19 டெல்டா திரிபு பரவலின்போது இது 79.5% செயல்திறன் விகிதத்தைக் கொண்டிருந்தது என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
தடுப்பூசியின் பெரும்பாலான பக்க விளைவுகள் லேசானது முதல் மிதமானது. சில நாட்களில் குணப்படுத்தக்கூடியது.
சிங்கப்பூரில் நோவாவேக்ஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெரியவர்களிடம் மாரடைப்பு பிரச்சினைகள் காணப்படவில்லை. எனினும், மிக அரிதாக இது மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ளது என்று குழு சொன்னது.
பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போல, நோவாவேக்ஸ் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசி அல்ல என்று நிபுணர் குழு கூறியது. வைரஸ் வகைகளை இலக்காகக்கொண்டு அது மேம்படுத்தப்படவில்லை.
சிங்கப்பூரில் கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசியே முதன்மையான பாதுகாப்பு என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
"கடுமையான நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, பரிந்துரைக்கப்பட்ட காப்பூசிகள் உட்பட, தடுப்பூசி அளவுகளைப் போட்டுக்கொள்ள தகுதியுள்ள அனைவரையும் ஊக்குவிக்கிறோம்," என்று அமைச்சு கூறியது.