கோவனில் வசிக்கும் அல்லது பணிபுரியும் மூவர் ஸிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொசுவால் பரவும் வைரஸ் இந்த ஆண்டில் இங்கு கண்டறியப்பட்டுள்ள முதல் சம்பவம் இது.
பாதிக்கப்பட்ட இருவர் வீட்டில் குணமடைந்து வருவதாகவும், மருத்துவமனையில் இருப்பவரின் நிலைமை சீராக உள்ளதாகவும் அவர்களில் எவரும் கர்ப்பமாக இல்லை என்று சுகாதார அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன. 2022ஆம் ஆண்டில், இரண்டு ஸிக்கா சம்பவங்கள் பதிவாகின.
குறிப்பாக கோவன் பகுதியில் வேலை செய்பவர்கள் அல்லது வசிப்பவர்கள், ஸிக்கா அறிகுறிகளைக்கொண்ட நோயாளிகளிடம் விழிப்புடன் இருக்குமாறும், ஸிக்கா பரிசோதனை செய்யுமாறும் மருத்துவர்களை அமைச்சு எச்சரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவர்களின் உடல்நிலையை அணுக்கமாகக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவன் குடியிருப்பாளர்கள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், தங்கள் உடல்நிலையைக் கண்காணிக்கவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் மருத்துவ உதவியை நாடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் தங்களது வசிப்பிடம், பணியிடம் குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் தெரிவிக்கவேண்டும்.
ஸிக்கா, பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசு கடித்தால் பரவும் வைரஸ் தொற்று.
"அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டாலும், மேலும் பாதிப்புகள் இருக்கக்கூடும் என்பதை நிராகரிக்க முடியாது, ஏனெனில் பாதிக்கப்பட்ட பெரும்பாலனோருக்கு லேசான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் இல்லாமலே இருக்கலாம்" என்று அமைச்சு கூறியது.
2016ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் ஸிக்கா வைரஸின் சமூக பரவலை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. அதே ஆண்டு, உலக சுகாதார அமைப்பு ஸிக்கா பரவலை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.
காய்ச்சல், அரிப்பு, உடல்வலி, தலைவலி, கண் சிவத்தல் போன்றவை இந்த வைரஸின் அறிகுறிகளாகும். எப்போதாவது குமட்டல், வாந்தி போன்றவையும் ஏற்படும்.
பொதுவாக கொசு கடித்த மூன்று முதல் 14 நாள்களுக்குள் இக்காய்ச்சல் உருவாகும். பெரும்பாலும் இரண்டு முதல் ஏழு நாள்களுக்குள் நீடிக்கும். அரிதாக, ஸிக்கா மைக்ரோசெபாலி எனும் பிரச்சினையை ஏற்படுத்தும்- கர்ப்பினிகளுக்கு இது ஏற்பட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தலை சிறிதாகவும், மூளை வளர்ச்சியடையாமலும் இருக்கும்.
பாதிக்கப்பட்ட ஆண்கள், குணமடைந்தபின், குறைந்தது மூன்று மாதங்களுக்கு பாதுகாப்பான உடலுறவு அல்லது உடலுறவில் ஈடுபடாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அதே நேரத்தில் பெண்கள் இரண்டு மாதங்களுக்கு இது அறிவுறுத்தப்படுகிறது.

