தெம்பனிஸ் விரைவுச்சாலையில் கார் ஒன்று மோதியதை அடுத்து மோட்டார்சைக்கிளில் சென்ற இரண்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சிலேத்தார் விரைவுச் சாலைக்குச் செல்லும் வழியில் பொங்கோல் புறச்சாலைக்கு முன்னதாக வியாழக்கிழமை காலை நேரத்தில் அந்த விபத்து நிகழ்ந்தது. காவல்துறை அது பற்றி புலன்விசாரணை நடத்தி வருகிறது.
எஸ்ஜி ரோடு விஜிலாண்டே ன்ற ஃபேஸ்புக் குழுமத்தில் அந்த விபத்தைக் காட்டும் காணொளி பதிவேற்றப்பட்டது.
கார் இடித்ததை அடுத்து மோட்டார்சைக்கிளில் இருந்து இரண்டு பேரும் தூக்கி எறியப்பட்டதைக் காணொளி காட்டியது. விபத்து நிகழ்ந்ததும் சம்பந்தப்பட்ட கார் நிற்காமல் வேகமாகச் சென்றுவிட்டதையும் காணொளி காட்டியது.
இந்த விபத்து பற்றி வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தனக்குத் தெரியவந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்த இருவரில் 27 வயது ஆடவர் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தார். 21 வயது பெண் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார். காவல்துறையின் புலன்விசாரணையில் 31 வயது வாகன ஓட்டுநர் ஒருவர் உதவி வருகிறார்.

