மற்றவர்களைவிட திறமை குறைந்தவர்களாக தாங்கள் நடத்தப்படுவதாக நினைவாற்றல் குறைபாடு உள்ளவர்களில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் கூறுகிறார்கள்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு) நடத்திய நாடளாவிய ஆய்வு இவ்வாறு தெரிவிக்கிறது. இதற்கு முன் 2019ஆம் ஆண்டில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் இப்படி தெரிவித்து இருந்தவர்கள் 56%தான். நினைவாற்றல் குறைபாடு ஏற்படுவதற்கு முன் இருந்த அளவுக்கு இப்போது தாங்கள் திறமையாக இல்லை என்று அவர்களில் பாதிப் பேர் தெரிவித்தனர்.
அன்றாட வாழ்வில் தங்கள் ஈடுபாடு 10ல் 3 என்ற அளவுக்கு அல்லது அதற்கும் குறைவாகவே இன்னமும் இருப்பதாக பாதிப் பேருக்கும் மேற்பட்டவர்கள் மதிப்பிடுகிறார்கள்.
இது முந்தைய ஆய்வை ஒத்துள்ளது. ஆனால் நிராகரிக்கப்படுவதாக, தனிமையை அனுபவிப்பதாக, அவமானத்தை எதிர்நோக்குவதாக கூறுவோர் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது. 2019ஆம் ஆண்டில் 72% ஆக இருந்த இந்த அளவு இப்போது 31% ஆகக் குறைந்துள்ளது.
நினைவாற்றல் குறைபாடு உள்ளோரின் வாழ்வில் கொவிட்-19 தொற்று எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை கண்டறிவதற்காக இப்போதைய ஆய்வு நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் தாக்கம் இல்லை என்றனர்.
அத்தகைய குறைபாடு உள்ளோருக்கு சிங்கப்பூர் எந்த அளவுக்குத் தோதாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதும் ஆய்வின் நோக்கம். அவ்வளவு தோதாக இல்லை என்று 75%க்கும் மேற்பட்டோர் கூறினர்.
ஆய்வு கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை நடத்தப்பட்டது. அதில் 3,226 பேரிடம் தகவல்கள் திரட்டப்பட்டன.
அவர்களில் 32 பேர் நினைவாற்றல் குறைபாடு உள்ளவர்கள். 619 பேர் பராமரிப்புச் சேவை வழங்குபவர்கள். மற்றவர்களில் பொதுமக்கள் அடங்குவர்.
சிங்கப்பூரில் நினைவாற்றல் குறைபாடு உள்ளோர் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டு வாக்கில் 152,000 ஆகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. 2018ஆம் ஆண்டு நிலவரப்படி அத்தகைய குறைபாடு உள்ளவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 82,000 ஆக இருந்தது.
அத்தகைய குறைபாடு உள்ளவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்று முன்பைவிட அதிக சிங்கப்பூரர்கள் விரும்புகிறார்கள்.
ஆனாலும் அத்தகைய குறைபாடு பற்றிய புரிந்துணர்வு மேம்பட மேலும் பலவற்றைச் செய்யவேண்டி இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருப்பதாக ஆய்வு குறிப்பிட்டு உள்ளது.

