அமைச்சர்களின் வாடகைச் சொத்து பற்றிய விளக்கம்
அமைச்சர்கள் கா சண்முகமும் விவியன் பாலகிருஷ்ணனும் (படங்கள்) ரைடவுட் ரோட்டிலுள்ள பங்களா வீடுகளை விதிகளுக்கு இணங்க வாடகைக்கு எடுத்ததாக சிங்கப்பூர் நில ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீர்திருத்தக் கட்சித் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னத்தின் சமூக ஊடகப் பதிவுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஆணை யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரைடவுட் ரோடு எண் 26 மற்றும் எண் 31 முகவரிகளில் உள்ள சொத்துகள் அமைச்சர்கள் வாடகைக்கு எடுக்கும்வரை நீண்டகாலமாக காலியாக இருந்ததாக ஆணையம் கூறியது.
"26 ரைடவுட் ரோடு சொத்து 2013 டிசம்பர் முதல் காலியாக இருந்தது. 2018 ஜூனில் அதனை ஏலக் குத்தகைக்கு விட்டபோது முகவர் ஒருவர் மூலம் சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம் அதற்கு விண்ணப்பித்து இருந்தார். ஏலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் அதிகமாக அவர் கேட்டதாலும் அவர் ஒருவர் மட்டுமே விண்ணப்பம் செய்திருந்ததாலும் அச்சொத்து அவருக்கு வாடகைக்கு விடப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட தொகை பற்றி அமைச்சருக்கு எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. அதேபோல 31 ரைடவுட் ரோடு சொத்து 2013 ஜூலை முதல் காலியாக இருந்தது. அதனை 2018 நவம்பரில் வெளியுறவு அமைச்சர் விவியன், நிர்ணயிக்கப் பட்ட ஏலத்தொகையைக் காட்டிலும் அதிகம் கேட்டிருந்தார். அவர் மட்டுமே அதிகமான வாடகைத் தொகைக்குக் கேட்டிருந்ததால் அச்சொத்து அவருக்கு வாடகைக்கு விடப்பட்டது," என்று ஆணையம் விளக்கி உள்ளது.
மேலும், ஜூலையில் நாடாளுமன்றம் கூடும்போது இது தொடர்பான கூடுதல் விவரங்களை மன்றத்தில் வெளியிட இருப்பதாகவும் ஆணையம் கூறியது.
வாழ்க்கையோடு குறள் இணைந்த விதம் - நாட்டிய வடிவில் இன்று
'குறள் அமுது - ஆயிரத்தில் ஒருவன்' எனும் நாட்டிய நாடக நிகழ்ச்சி, இன்று மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற இருக்கிறது. மாஸ்க் ஸ்டூடியோஸ், கலாமஞ்சரி ஆகியவை இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த நாட்டிய நாடகத்தில், தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாக பரதநாட்டியம் தவிர ஜல்லிக்கட்டி, கபடி, சிலம்பம், கரகம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், தப்பு ஆகியவை உள்ளன. பிறப்பு முதல் இளம் பருவம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் குறள்கள் பின்னிப் பிணைந்து இருப்பதை இந்த நாட்டிய நாடகம் வெளிப்படுத்துகிறது. முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இந்தியாவிலிருந்து திருமதி சுதா ஸ்வர்ணலட்சுமியால் இயற்றப்பெற்ற இந்நிகழ்ச்சியில்
10 இந்திய கலைஞர்களும் உள்ளூர் கலைஞர்கள், ஓம்கார் ஆர்ட்ஸ் கலைப்பள்ளியின் மாணவர்கள் 16 பேரும் பங்கேற்பர். அனுமதி இலவசம். இதில் பங்குபெற
விரும்புவோர் https://www.eventbrite.sg/e/628280974307 இணையத்தளத்தில் பதிந்துகொள்ளலாம்.
திடீர் தீ; காரில் மின்னேற்றம் செய்யப்பட்டதால் ஏற்பட்டிருக்கலாம்
செந்தோசா கோவ் வீடு ஒன்றின் கார் நிறுத்தப் பகுதியில் திடீரென்று தீப்பற்றியது. தீப்பிடித்ததற்கு, மின்னேற்றம் செய்யப்பட்ட மின்சார கார் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணியளவில் 12 கோவ் வே முகவரியில் உள்ள வீட்டில் தீச்சம்பவம் நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) கூறியது. மின்னேற்றம் செய்யப்பட்ட காரில் பற்றிய தீ அருகில் இருந்த 'ஸ்போர்ட்ஸ் கார்' ஒன்றுக்கும் பரவியதைத் தாம் கண்டதாக அவ்வட்டாரப் பணிப்பெண் ஒருவர் சீன நாளிதழிடம் கூறினார். வீட்டில் இருந்த இருவர், தனது படையினர் வரும் முன்னரே வெளியேறிவிட்டதாகவும் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.

