குறைந்த வருமானக் குடும்பங்களின் செல்லப்பிராணிகளுக்கு நேற்று இலவச சுகாதாரப் பரிசோதனை நடத்தப்பட்டது.
விலங்குவதைத் தடுப்புச் சங்கம் மார்சிலிங்கில் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் 130க்கும் மேற்பட்ட செல்லப் பிராணிகளுக்கு சுகாதாரப் பரிசோதனை செய்யப்பட்டது. இப்படி ஒரு சுகாதாரப் பரிசோதனை நடத்தப்பட்டு இருப்பது சிங்கப்பூரில் இது முதல்முறை.
செல்லப்பிராணிகளை வளர்க்கும் நிதியுதவி தேவைப்படுவோர் மற்றும் வாடகை வீட்டில் வசிப்போருக்கு உதவுவது இத்திட்டத்தின் நோக்கம். சிங்கப்பூர் முழுவதும் இதுபோன்ற பத்து இலவச சுகாதாரப் பரிசோதனைகளை நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.
நேற்றைய பரிசோதனையில் 106 பூனைகள், 24 நாய்கள் மற்றும் வெள்ளெலி உள்ளிட்ட சிறிய செல்லப்பிராணிகள் கலந்துகொண்டன.
அவற்றின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டதோடு தேவைப்பட்டால் தடுப்பூசியும் போடப்பட்டது. அடுத்தடுத்து மருத்துவக் கவனிப்புத் தேவைப்படும் விலங்குகளுக்கு ரத்தப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. விலங்குவதைத் தடுப்புச் சங்கத்தின் கால்நடை மருத்துவர்களும் தாதியரும் இந்தச் சேவைகளை வழங்கினர்.
இந்தப் பரிசோதனை நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து சங்கத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி ஆர்த்தி சங்கர் விளக்கினார்.
"கால்நடைப் பராமரிப்புக்கான செலவுகள் உயர்ந்துவரும் நிலையில் கால்நடை மருத்துவர்களுக்கான பற்றாக்குறையும் நிலவுகிறது. இதனால், நிதிச் சிரமத்தில் இருப்போர் தங்களது செல்லப்பிராணிகளின் நலனைக் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது.
"விலங்குகளின் உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்துவிட்டால் பின்னாளில் வரக்கூடிய பெரிய மருத்துவச் செலவுகளை அவர்களால் தவிர்க்கமுடியும்.
"மேலும், மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க இயலாமல் தங்களது செல்லப்பிராணிகளைக் கைவிடும் நிலையைத் தடுக்கவும் இந்த இலவசப் பரிசோதனைத் திட்டம் உதவும்," என்றார் அவர்.

