சிங்கப்பூரில் வேலையிடங்களில் பெண்களின் மேம்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும்கூட தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்கும்படி மாதருக்கு ஊக்கமூட்ட மேலும் பலவற்றைச் செய்ய வேண்டி இருக்கிறது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூர் முஸ்லிம் மாதர் சங்கம் ஏற்பாட்டில் அனைத்து சமய நல்லிணக்கக் கொண்டாட்ட விழாவும் அன்னையர் தினமும் நேற்று சேர்ந்து கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக அதிபர் கலந்துகொண்டார்.
அந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சாதனை படைத்த பல மாதர்களும் பல்வேறு சமயம் சார்ந்த, சமயச் சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த சமூகத் தலைவர்களுமாக 100 பேர் கலந்துகொண்டனர்.
கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் சாதனை படைத்த தலைவிகளும் இதர புத்தாக்க சாதனையாளர்களும் அந்த நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.
இரட்டைக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு நிகழ்ச்சி 'மாபெரும் முன்மாதிரிகள்' (சாதனை படைத்தோரும் மற்றும் வாழ்க்கை கதைகளும்) என்ற கருப்பொருளுடன் நடந்தது.
பெண்களின் முக்கியமான பொறுப்பு பராமரிப்புதான் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்பு இன்னமும் தொடர்வதாக அதிபர் தெரிவித்தார்.
தலைமைத்துவப் பொறுப்புகளை மேற்கொள்வது தங்களுக்குச் சிரமமானதாக இருக்கக்கூடும் என்று பெண்கள் கருதுவதற்கு இதுவே அநேகமாக காரணமாக இருக்கலாம் என்றாரவர். சட்டம், கொள்கைகளுக்கெல்லாம் அப்பாலும் மனப்போக்கு மாற்றம் முக்கியம் என்று அதிபர் வலியுறுத்திக் கூறினார்.
ஆண்கள், பெண்களுக்கான பணிகள், பொறுப்புகள் பற்றி வழிவழியான எதிர்பார்ப்புகளையும் ஆண், பெண் இருபாலருக்கும் இடைப்பட்ட பாரபட்சத்தையும் நீக்கும் வகையில் மனப்போக்கு மாற்றம் அவசியம் என்றாரவர்.
சமூகம் முழுவதுமாகச் சேர்ந்து இதைச் சாதித்து நியாயமான மேலும் எல்லாரையும் உள்ளடக்கக்கூடிய சமூகத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற அவர் இது குடும்பத்தில் இருந்துதான் தொடங்குகிறது என்றார்.
வேலையிடத்தைப் பொறுத்தவரை தலைமைத்துவ ஆற்றலுடன் கூடிய பெண்களை அங்கீகரித்து அவர்களுக்கு ஊக்கமூட்டி மாதர் மேம்பாட்டைச் சாதிக்கும் வேலையிட கலாசாரத்தை நாம் தொடர்ந்து பேணி வளர்க்க வேண்டும் என்றார் அதிபர்.
இளம் மாதர்களிடம் ஆக்ககரமான செல்வாக்கை ஏற்படுத்த முன்மாதிரியாகவும் மதியுரைஞர்களாகவும் திகழக்கூடிய மாதர்கள் தேவை என்றும் அதிபர் குறிப்பிட்டார்.

