சாலையில் நிர்வாணமாகப் படுத்து இருந்தார்; ஆடவர் கைது
செம்பவாங்கில் சாலை ஒன்றில் ஆடவர் ஒருவர் நிர்வாணமாகப் படுத்து இருந்ததை வெள்ளிக்கிழமை எஸ்ஜிஃபாலோசால் என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளி காட்டியது. அதை அடுத்து 34 வயது ஆடவர் கைதானார்.
செம்பவாங் ரோட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.40 மணிக்கு உதவி கேட்டு தனக்குத் தகவல் வந்ததாக காவல்துறை தெரிவித்தது. புலன்விசாரணை நடந்துவருகிறது. பொது இடத்தில் நிர்வாணமாகப் தோன்றியதன் தொடர்பில் யாராவது குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு மூன்று மாதம் வரை சிறை, $2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும்.
குடியிருப்பாளருக்கு உதவ மருத்துவர்களுக்கு உதவி
தோ பாயோவில் வசிப்போர், குறிப்பாக முதியோர் நல்ல உடல்நலனுடன் வாழ்வதற்கு உதவும் வகையில் டான் டோக் செங் மருத்துவமனையும் கேர் கார்னர் சிங்கப்பூர் அமைப்பும் அந்தப் பகுதியல் தொழில் நடத்தும் தனியார் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு வருகின்றன.
அந்தப் பகுதியில் தொழில் நடத்தும் 60க்கும் மேற்பட்ட தனியார் குடும்ப மருத்துவர்கள், தங்கள் சமூகங்களுக்குள் கிடைக்கக்கூடிய சுகாதார, சமூக சேவைகள் பற்றி தெரிந்துகொள்ளச் செய்வது நோக்கம்.
குடியிருப்பாளர்கள் குடும்ப மருத்துவர் ஒருவரிடம் தங்களைப் பதிந்துகொள்ள அந்த இயக்கம் ஊக்க மூட்டும். தங்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மருத்துவர்கள் அந்தச் சேவைகளிடம் அனுப்பிவைக்க வழி ஏற்படும்.
மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி என்ற தேசிய இயக்கம் ஜூலை மாதம் தொடங்குகிறது. அதன்படி, தங்களிடம் பதிந்துகொள்ளும் குடியிருப்பாளர்கள் உடல்நலன் பற்றி அவர்களின் மருத்துவர்களுக்குத் தெரியும். ஆகையால், குடியிருப்பாளர்களுக்கு ஏதேனும் நோய் ஏற்படாமல் அதை முன்கூட்டியே தடுத்துவிட உதவி கிடைக்கும்.
செந்தோசாவில் பிளாஸ்டிக் போத்தலுக்கு பிரியாவிடை
செந்தோசா தீவில் செயல்படும் ஹோட்டல்கள், உணவு, பானக் கடைகள், கவர்ச்சி இடங்கள் அனைத்தும் இந்த ஆண்டு முடிவில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு பிரியாவிடை கொடுத்துவிடும். இதனால் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தது இரண்டு மில்லியன் போத்தல்கள் மிச்சமாகும்.
ஹோட்டல் அறைகளில், நிகழ்ச்சிகளில், சாப்பிடும் இடங்களிலும் வாங்கி எடுத்துச்செல்லவும் இனி பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் கொடுக்கப்படமாட்டா என்று செந்தோசா வளர்ச்சிக் கழகம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
தனது மறுசுழற்சி விகிதம் 2016ஆம் ஆண்டில் 7.5% ஆக இருந்தது என்றும் அது இரண்டு மடங்காகி 2022ஆம் ஆண்டில் 7.5% ஆகியது என்றும் கழகம் குறிப்பிட்டது. இருந்தாலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் குறைக்க மேலும் பலவற்றைச் செய்யமுடியும் என்றும் அது தெரிவித்தது.

