சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா), சிங்கப்பூர் இந்திய இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை மேம்படுத்த புதிய வழிகாட்டித் திட்டத்தை ('Mentorship to let her shine!') பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி, இரண்டாம் அமைச்சரும் சிண்டாவின் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா சனிக்கிழமை அறிமுகப்படுத்தினார்.
அறிவியல், கணிதம் தொழில்நுட்பம், பொறியியல் போன்ற துறைகளில் சாதனை படைத்துள்ள பெண்கள் இத்திட்டத்தில் வழிகாட்டிகளாக செயல்பட்டு 20 முதல் 30வரை வயதுள்ள இந்திய இளம் பெண்களுக்கு அறிவுரை கூறி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வர் என்றாரவர்.
பாகுபாடுகளைப் பார்க்காமல் பல துறைகளிலும் பெண்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன், இந்திய சமூக இளம் பெண்களுக்கு வேலை தொடர்பான ஆதரவை தொடர்ந்து வழங்குவதற்கு 'எஸ்ஜி ஹர் எம்பவர்மெண்ட்' (ஷி) என்ற அமைப்பும் சிண்டாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இளம் பெண்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெறவும் அவர்களின் வேலையிட அறிவாற்றலும் திறன்களும் மேம்படவும் உதவுவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.
சிண்டாவின் 'லெட் ஹர் ஷைன்' (Let Her shine) திட்டத்தின் ஓராண்டு விழா கொண்டாட்டத்தில் அத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 'லெட் ஹர் ஷைன்' திட்டம் பெண்களின் மேம்பாட்டுக்காக பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ஏழு வயதில் இருந்து 35 வயது வரை உள்ள கிட்டத்தட்ட 550 பெண்களுக்கு அத்திட்டம் உதவிஉள்ளது. இந்த ஆண்டிற்குள் 1,300 பெண்களுக்குத் உதவ சிண்டா உறுதிபூண்டுள்ளது.
இதனிடையே, பர்வீன்பால் கோர், 24, என்ற பல்கலைக்கழக மாணவி, வேலைக்கான நேர்காணலுக்கு ஆயத்தமாவது, வேலைக்குத் தேவையான ஆற்றல்களை வளர்த்துக்கொள்வது போன்றவற்றை இத்திட்டத்தின் மூலம்தான் தாம் கற்றுக்கொண்டதாக தமிழ் முரசிடம் கூறினார்.
விண்வெளி மின்னிலக்கத் துறையில் சேர விரும்பும் 19 வயது லட்சுமி ஸ்ரீநிதி என்ற தெமாசெக் பயிலக மாணவி, "இந்தத் துறையிலும் பெண்கள் சேரலாம் என்று சிண்டாவின் திட்டம் எனக்கு ஊக்குவித்துள்ளது.
"இதுபோன்ற துறைகளில் சேர்ந்து என்னை மேம்படுத்திக்கொள்ள என்ன செய்யலாம் என்பதை இத்திட்டம் போதிக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.
சிண்டாவின் தலைமை நிர்வாகி திரு அன்பரசு ராஜேந்திரன், 'லெட் ஹர் ஷைன்' திட்டத்தை நனைவாக்கிய நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் சிண்டாவும் சமூகமும் கடமைப்பட்டுள்ளன. இந்தத் தொடர் முயற்சிகளால் பெண்களுக்குப் பல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய தளமாக இத்திட்டம் அமையும் என்று சிண்டா நம்புகிறது" என்றார்.
rachv@sph.com.sg

