செயற்கை நுண்ணறிவுத் துறையில் மொழி அறிவுக்கு அதிக தேவை
ஆங்கிலம் அல்லது இதர மொழிகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சிறப்பான வேலைகளைச் செய்யும் வகையில் சாட்ஜிபிடி அல்லது வடிவங்களை உருவாக்கும் மிட்ஜெர்னி போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு உத்தரவிடக்கூடிய ஆற்றலுடன் கூடிய பொறியாளர்களுக்கு இப்போது அதிக தேவை ஏற்பட்டு உள்ளது.
இந்த வகை திறமைகள், இப்போதுதான் தலைகாட்டி இருக்கின்ற புதிய வகை மென்பொருள் உருவாக்கத் துறையில் பயன்படுத்தப்படுகின்றன. அந்தத் துறைக்கு எழுத்துரு பொறியியல் (prompt engineering) என்று பெயர். வழக்கமான மென்பொருள் பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்பு இணையத் தளங்களைப் பார்க்கும்போது அவர்களுக்குத் தொழில் நுட்பத் தேர்ச்சி தேவை என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.
ஆனால் எழுத்துரு பொறியாளர்களுக்கான பல விளம்பரங்களில் தொழில்நுட்பத் தேர்ச்சி நிபந்தனை காணப்படுவதில்லை.
இத்தகைய எழுத்துரு பொறியாளர்களுக்கு ஆறு இலக்க ஊதியம் கொடுக்க முடியும் என்று அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாட்ஜிபிடி போன்ற பெரிய மொழி மாதிரிகளை உருவாக்குவதற்னான எழுத்து உருவ கட்டளைகளை உருவாக்குவது இத்தகைய பொறியாளர்களின் வேலைகளில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வளர்ச்சி மந்தக் குறைபாடுள்ள
பட்டதாரிகளுக்கான செயல்திட்டம்
டிராம்போலின் என்ற லாப நோக்கற்ற ஆய்வு தொழில்நுட்ப அமைப்பு புதிய ஒரு செயல்திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
வளர்ச்சி மந்தக் குறைபாடு (ஆட்டிசம்) உள்ள பல்கலைக்கழக கல்வி கற்றுள்ள பட்டதாரிகளுக்குப் பயிற்சி அளித்து அவர்களைப் பொறியியல் துறையில் வேலையில் அமர்த்த அந்தச் செயல்திட்டம் உதவுகிறது.
'கேட்ஸ்' (Gates) என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் அந்தச் செயல்திட்டம் சென்ற ஆண்டில் மே மாதம் தொடங்கப்பட்டது. அதற்கு வெற்றிக்குத் தொகை என்ற வகையில் தெமாசெக் அறநிறுவனம் ஆதரவளிக்கிறது.
டிராம்போலின், சென்ற ஆண்டு மே முதல் 30 மாதங்களில் 70 பேருக்குப் பயிற்றி அளிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தது. இப்போது வரை 42 பட்டதாரிகளுக்கு அது பயிற்சி அளித்துள்ளது. அவர்களில் 18 பேர் வேலையில் சேர்க்கப்பட்டனர்.
பிடோக்கில் புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையம்
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குத் தேவை அதிகமாக இருக்கிறது.
இதைக் கருத்தில்கொண்டு பிடோக்கில் புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. (படம்).
பிடோக் நார்த் அவென்யூ4ல் உள்ள புளோக் 105ல் செயல்படும் அந்த நிலையம், நாட்டின் கிழக்கே தேசிய சிறுநீரக அறநிறுவனம் அமைத்துள்ள ஆறாவது நிலையமாகும். ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செரில் சான் அதை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
அந்தப் புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு மான் ஃபாட் லாம் பௌத்த ஆலயம் ஆதரவு அளிக்கிறது.
ரத்த சுத்திகரிப்பு நோயாளிகள் பலருக்கும் போக்குவரத்துப் பிரச்சினை உள்ளது. ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை அவர்களிள் வீட்டு அருகே அமைத்தால் அத்தகைய நோயாளிகள் வசதியாக சிகிச்சை பெறலாம் என்று திறப்புவிழாவில் பேசிய திருவாட்டி சான் தெரிவித்தார்.

