புதிய வீடுகளுக்கான விற்பனை ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏப்ரலில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
நகரின் இரண்டு முக்கிய வீட்டுத் திட்டங்களில் எதிர்பாராத விலைக்கு வீடுகள் விற்கப்பட்டு உள்ளன.
சென்ற ஏப்ரல் 27ஆம் தேதி சொத்துச் சந்தையைக் கட்டுப் படுத்தும் புதிய நடவடிக்கைகள் அமலுக்கு வந்த நிலையில் இரண்டு புதிய வீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகள் தவிர்த்து புதிய தனியார் வீடுகளின் விற்பனை மார்ச் மாதம் 492 வீடுகளிலிருந்து ஏப்ரலில் 887 வீடுகளுக்கு அதி கரித்தது. இது, ஏறக்குறைய 80 விழுக்காடு உயர்வாகும்.
இதில் தஞ்சோங் காத்தோங்கில் அறிமுகமான 'தெம்புசு கிராண்ட்', போனவிஸ்தாவில் விற்பனைக்கு வந்த 'புளோசம்ஸ் பை த பார்க்' ஆகிய இரண்டு வீட்டுத் திட்டங்களும் ஏப்ரலில் விற்கப்பட்ட வீடுகளில் 63 விழுக்காடு பங்கை வகிக்கின்றன.
இவற்றில் தெம்புசு கிராண்ட்டின் 354 வீடுகள் ஒரு சதுர அடி 2,463 வெள்ளிக்கும் 'புளோசம்ஸ் பை த பார்க்'கின் 205 வீடுகள் சதுர அடி 2,427 வெள்ளிக்கும் விற்கப்பட்டன.
ஆண்டு அடிப்படையில் கடந்த ஆண்டு 2022 ஏப்ரலில் விற்கப் பட்ட 661 வீடுகளுடன் ஒப்பிடு கையில் தற்போது 34.2 விழுக் காடு விற்பனை அதிகரித்து உள்ளதை நேற்று வெளியிடப்பட்ட நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எக்சிகியூட்டிவ் கொண் டோமினிய வீடுகளை உள்ளடக் கினால் ஏப்ரல் மாத விற்பனை 77.9 விழுக்காடு கூடி 909 வீடுகள் விற்கப்பட்டுள்ளன.
இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் 513 வீடுகள் விற்கப்பட்டன. ஓராண்டுக்கு முன்பு ஏப்ரலில் விற்கப்பட்ட 847 வீடுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது 7.3 விழுக்காடு கூடியுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தாலும் சிறிய வீடு களுக்கான தேவை நிலையாக இருந்தது என்று ஆரஞ்சுடீ அண்ட் டை நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த உதவி தலைவர் கிறிஸ்டைன் சன் தெரிவித்துள்ளார்.
புளோசம்ஸ் பை த பார்க் திட்டத்தில் 205 சிறிய வீடுகளில் 59 விழுக்காடு, அதாவது 120 வீடுகள் விற்கப்பட்டுள்ளன. இதன் அளவு 70 சதுர மீட்டருக்கும் குறைவு.

