2018ல் உலக சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சிங்கப்பூருக்கு பெருமை தேடித் தந்த ஷேக் ஃபெர்டுஸ் ஷேக் அலாவுதினுக்கு குடித்துவிட்டு வாகனமோட்டியதற்காக 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
அதோடு 48 மாதங்கள் வாகனம் ஓட்டவும் அவருக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மூச்சுக்காற்று பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் 2.65 மடங்கு ஆல்கஹால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிங்கப்பூர் சிலாட் சம்மேளனத்தின் தலைமை நிர்வாகியான டாக்டர் ஷேக் அலாவுதின் யாக்கோப் மரைக்கானின் மகனும் ஆவார் அவர்.
2022 நவம்பர் 27ஆம் தேதி அதிகாலை 2.50 மணியளவில் கெப்பல் சாலையை நோக்கிச் செல்லும் கண்டோன்மெண்ட் சாலையின் இடதுபக்கத் தடத்தில் ஷேக் ஃபெர்டுசின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை இரு காவல்துறை அதிகாரிகள் கண்டனர்.
அப்போது, காரின் இயந்திரம் நிறுத்தப்படாமல் அபாய விளக்கு, முன்பக்க விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன.
ஒட்டுநர் இருக்கையில் ஷேக் ஃபெர்டுஸ் முன்பக்கமாக சாய்ந்து தலைகவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தார்.
கண்கள் சிவந்து குடிபோதையில் தடுமாறிய ஷேக் ஃபெர்டுசுடன் அதிகாரிகள் பேச்சு கொடுத்தனர்.
சுவாசப் பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து அவர் போக்கு வரத்து தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 2.65 மடங்கு ஆல்கஹால் மூச்சுக்காற்றில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முந்தைய நாள் இரவு புக்கிட் பாசோவில் ஷேக் ஃபெர்டுஸ் மூன்று கேன் பீர் குடித்தது விசாரணையில் தெரியவந்தது.
விடியற்காலை 1.30 மணியளவில் கடைசியாக அவர் குடித்துவிட்டு பாசிர் ரிஸ்ஸில் உள்ள வீட்டுக்கு காரில் சென்றுள்ளார். பின்னர் கண்டோன்மெண்ட் சாலையின் இடதுபக்கத் தடத்தில் அவர் காரை நிறுத்திவிட்டார்.
அப்போதுதான் அவரை காவல்துறையினர் சோதனையிட்டு உள்ளனர்.

