தாவோயிசக் கோயிலை அமைக்கவும் நிகழ்ச்சிகளை நடத்தவும் ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் பங்களித்த அக்கோயிலின் முன்னாள் தலைவர் பணத்தை திருப்பிக் கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார்.
2016க்கும் 2018க்கும் இடையே கொடுக்கப்பட்ட பணம் கடனாகத் தரப்பட்டது என்று திரு ரிச்சர்ட் லிம் சுவீ ஜூ கூறியுள்ளார்.
'நான் பெய் டாவ் மு கோங்' எனும் கோயில் 2016 செப்டம்பரில் பதிவு செய்யப்பட்டது.
திரு லிம் தற்போதைய கோயில் செயலாளரான எரிக் கோ ஜூ ஹெங்கை மற்றொரு பிரதிவாதியாகக் குறிப்பிட்டார்.
கோயிலை அமைத்து நிகழ்ச்சிகள் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என்று திரு கோ கூறியதாகவும் கோயிலுக்கு கொடுக்கப்பட்ட கடன் பக்தர்களிடமிருந்து திரட்டப்படும் நிதிமூலம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அவர் கூறியதாகவும் தனது மனுவில் திரு லிம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை மறுத்துள்ள பிரதிவாதி, அவர் கொடுத்த பணம் கடனல்ல, நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
மே 2ஆம் தேதியிலிருந்து இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

