அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் எப்படி நீடித்து நிலைத்திடும்? இந்தப் பயணத்தில் பள்ளிகளின் பங்கு என்ன? என நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் இருநூற்றாண்டு விரிவுரையின்போது கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வந்திருந்தோரை நோக்கி வினவினார்.
சிங்கப்பூர் மீண்டும் புதிய, நிச்சயமற்ற சூழல்களையும் உச்சப் பாதுகாப்பின்மை நிலையையும் எதிர்நோக்குவதாக அவர் சுட்டினார்.
அதனால், சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிபெறுவதற்குப் பள்ளிகள் மூன்று முக்கிய அம்சங்களில் பங்களிக்க வேண்டும் என்றார் அவர்.
வாய்ப்புகள் நிறைந்த ஓர் இடம்
சிங்கப்பூர் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கும் ஓர் இடமாகத் திகழ, பள்ளிகள் முதலில் முன்னோடிகளாக இருந்து ஒவ்வொரு மாணவரும் தங்களின் முழு ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு கல்வி முறையை உருவாக்கப் பங்களிக்கவேண்டும் என்றார் அவர்.
ராஃபிள்ஸ் கல்வி நிலையம் 1990ல் தன்னாட்சிப் பள்ளியாக மாறிய முதல் அரசுப் பள்ளி என்று தெரிவித்தார் திரு சான்.
அந்த மாற்றத்தால் புத்தாக்கக் கல்விசார் மாதிரிகளை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றலைப் பள்ளி மேலும் வலுவாக்கிக்கொண்டது என்றார். தற்போது ஒவ்வொரு நிலையிலும் சுமார் 400 மாணவர்கள் பயில்கின்றனர்.
புத்தாக்கமும் ஒத்துழைப்பும்
கலந்த ஒரு கலாசாரம்
அதிவிரைவாக மாறிவரும் சூழலில் சிங்கப்பூர் புத்தாக்கமும் ஒத்துழைப்பும் கலந்த ஒரு வலுவான கலாசாரத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் திரு சான்.
"நாளுக்கு நாள் பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் அதிகரித்துக்கொண்டே வரும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். வெவ்வேறு கலாசாரங்களையும் பின்னணிகளையும் சேர்ந்தவர்களை இணைக்கும் கண்ணோட்டத்தையும் திறமையையும் நம் மக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்," என்றார் அவர்.
பள்ளிப் பாடத்திட்டத்தையும் தாண்டி பலவற்றைக் கற்கும் ஆர்வத்தைக் கைவிட வேண்டாம் என அறிவுறுத்தினார் அமைச்சர் சான்.
மற்ற கலாசாரங்களையும் நாடுகளையும் ஆழப் புரிந்துகொள்ள முயல்வதையும் அவர் ஊக்குவித்தார்.
இதற்கிடையே, உலகை நம் மாணவர்கள் முன் கொண்டுவர வேண்டும் என்றும் வட்டார நாட்டினரை வரவேற்று அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார் அவர்.
சேவையாற்றுவதில் வேரூன்றிய
ஒரு தலைமுறை
சிங்கப்பூருக்குச் சேவையாற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களை உருவாக்குவதில் பள்ளிகள் கவனம் செலுத்த வேண்டும்.
மக்களின் தரமும் தலைமைத்துவத்தின் குணமும் எப்போதும் உச்சத்தில் இருக்க வேண்டும் என்றார் அவர். சிறிய நாடென்றாலும் இத்தகைய சிறப்புகள் கொண்ட நாடாக சிங்கப்பூர் விளங்க வேண்டும் என்றார்.
"நம் பள்ளிகள் அனைத்தும் மாணவர்களிடத்தில் சேவை புரியும் விருப்பத்தை விதைக்க வேண்டும். திரும்பக் கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ற தேவைகளை நிறைவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் அமைச்சர் சான்.

