சிங்கப்பூருக்கு 6,500 அட்டைப் பெட்டிகளுக்கும் அதிகமான வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்தும் முயற்சியை துவாஸ் சோதனைச்சாவடியில் குடிநுழைவு அதிகாரிகள் முறியடித்தனர்.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஏப்ரல் 18ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தது. எஃகு அமைப்பு முறையை அது கொண்டு வந்தது. லாரியைச் சோதித்த படங்களில் முரண்பாடு இருந்ததை அதிகாரிகள் கவனித்ததாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் நேற்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
அந்த எஃகு கற்றைகளை வெட்டிப் பார்த்ததில், மொத்தம் 6,547 அட்டைப் பெட்டிகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் அதற்குள் ஒளித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
கூடுதல் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டதாக ஆணையம் கூறியது.
அதே தினம், 314 அட்டைப் பெட்டிகள், 1,558 பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை காரில் கடத்தும் முயற்சியை உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் முறியடித்தனர்.
தரை சோதனைச்சாவடிகளில் இவ்வாண்டு இதுவரை வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் ஆகப்பெரிய கடத்தல் முயற்சி, ஜனவரி 18ஆம் தேதி துவாஸ் சோதனைச்சாவடியில் முறியடிக்கப்பட்டது. அப்போது 12,708 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளை இங்கு கடத்தும் முயற்சி இடம்பெற்றது.

