உள்ளூர் யூடியூப் ஒளிவழியில் முன்னாள் திரைக்கதை எழுத்தாளர்-நடிகரும் டிக்டாக் பிரபலமுமான லெவ் பான்ஃபிலோவ், 27, (படம்) என்பவர்மீது டேட்டிங் செயலியான தின்டரில் தாம் சந்தித்த பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திரைக்கதை எழுதுவதற்காக அப்பெண்ணை பான்ஃபிலோவ் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றதைத் தொடர்ந்து, படுக்கை அறையில் பாலியல் வன்கொடுமை இடம்பெற்றது.
ரஷ்யாவைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியான பான்ஃபிலோவ், 2021 ஜனவரி 12ஆம் தேதி இரவு ரிவர் வேலி கூட்டுரிமை வீட்டில் குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட அந்த வீட்டை இருவருடன் அவர் பகிர்ந்துகொண்டார்.
தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்த்து பான்ஃபிலோவ் முறையிடுகிறார். உயர் நீதிமன்றத்தில் 12 நாள்களுக்கு வழக்கு விசாரணை நடைபெறும். வழக்கறிஞர்கள் அனில் பால்சந்தனி, அஷ்வின் கணபதி குற்றம் சாட்டப்பட்டவரை இந்த வழக்கில் பிரதிநிதிக்கின்றனர்.
குற்றச்சம்பவம் நிகழ்ந்தபோது அப்பெண்ணுக்கு வயது 30. நீதிமன்ற உத்தரவு காரணமாக அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
டிக்டாக்கில் பான்ஃபிலோவின் பக்கத்தை 27,000க்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். சிங்கப்பூர் வாழ்க்கை பற்றிய நகைச்சுவையான காணொளிகளை அவர் பதிவிடுகிறார்.
பான்ஃபிலோவும் அந்தப் பெண்ணும் தின்டரில் சந்தித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஸ்ருதி போபண்ணா நீதிமன்றத்தில் நேற்று கூறினார்.
"பாதிக்கப்பட்டவர் அந்தச் சமயத்தில் திரைக்கதை எழுதிக்கொண்டு இருந்ததால், குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து அறிவுரையும் கருத்துகளும் பெற முடியும் என அவர் நினைத்தார்," என்று வழக்கறிஞர் ஸ்ருதி கூறினார்.
தின்டரிலும் வாட்ஸ்அப்பிலும் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொண்ட இருவரும் ராபர்ட்சன் கீயில் உள்ள உணவகம் ஒன்றில் முதன்முறையாக நேரில் சந்தித்தனர்.
இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டு அப்பெண்ணின் திரைக்கதையில் இருவரும் பணியாற்றினர். உணவகம் மூடும் நேரம் வந்துவிட்டதால், தமது குடியிருப்பில் வேலையைத் தொடரலாம் என்று பான்ஃபிலோவ் பரிந்துரைத்ததற்கு அப்பெண் இணக்கம் தெரிவித்தார்.
தமது மடிக்கணினியை எடுத்துக்கொண்டு பான்ஃபிலோவுடன் படுக்கையில் அமர்ந்தார் அப்பெண். வெவ்வேறு நகைச்சுவை நடிகர்களின் யூடியூப் காணொளிகளைப் பார்த்த இருவரும், நகைச்சுவை கோட்பாடுகள் குறித்து கலந்தாலோசித்து அப்பெண்ணின் திரைக்கதையை எழுதினர்.
சற்று நேரம் கழித்து பான்ஃபிலோவ் தமது சுயரூபத்தை வெளிப்படுத்தினார். அப்பெண்ணிடம் வலுக்கட்டாயமாக முத்தமிடத் தொங்கிய அவர், பின்னர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
வன்கொடுமை நடந்து சில நாள்களுக்கு தமது அடிவயிற்றில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பெண் மருத்துவ உதவி நாடினார்.
காவல்துறையிடம் புகார் அளிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி அவரால் முடிவெடுக்க முடியவில்லை.
2021 ஜனவரி 18ஆம் தேதி அறையில் அவர் அழுதுகொண்டு இருந்ததைக் கவனித்த அவரின் தாயார் நடந்தது குறித்து கேட்டறிந்ததைத் தொடர்ந்து, அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
வழக்கு விசாரணை தொடர்கிறது.

