அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள உறவு பழைய நிலைக்குத் திரும்புவது கடினம்தான். இத்தகைய சக்திவாய்ந்த மோதல் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் நிலைமையைக் கையாள சிங்கப்பூர் தன் நலனைக் கருத்தில் கொண்டவாறு நம்பகமான, கொள்கைசார்ந்த வகையில் நடந்துகொள்வதே சிறந்தது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
சீனாவுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ள திரு வோங், சிங்கப்பூர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
தவறாகப் புரிந்துகொள்ளுதல், வேறுபாடுகளைச் சமாளித்தல், மோதலைத் தவிர்த்தல் ஆகியவற்றின் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருந்து தங்களின் இருதரப்பு உறவுக்கு ஒரு புதிய அடித்தளத்தை அமைப்பதில் அமெரிக்காவும் சீனாவும் கவனம் செலுத்த வேண்டும் என்ற நம்பிக்கை நிலவிவருகிறது. அதற்கு இரு நாடுகளும் தங்களின் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்கும் தளங்கள் இருக்க வேண்டும் என்றார் திரு வோங்.
இரு நாடுகளுக்கும் குறிப்பிட்ட கொள்கையை சிங்கப்பூர் அறுதியிட முடியாது என்றார் அவர். இருப்பினும், இரு நாடுகளுடனும் நட்புறவை முடிந்தவரை தக்கவைத்துக்கொள்ள சிங்கப்பூர் முயலும் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவும் சீனாவும் சிங்கப்பூரின் கருத்தை நாடினால் தன் கண்ணோட்டத்தை ஒளிவுமறைவின்றி நடுநிலை தவறாது அது தெரிவிக்கும் என்றார் திரு வோங்.

