அரசாங்கம், ஊடகத்துறை உறவு தொடர்பில் ஜோசஃபின் டியோ
அரசாங்கத்திற்கும் ஊடகத்துறைக்கும் இடையே உள்ள உறவு அழுத்தமில்லாத ஒன்று என்று கூறிவிட முடியாது. ஆனால், நம்பிக்கை, மதிப்பு இரண்டின் அடிப்படையிலும் இருதரப்புகளும் செயல்படுவது முக்கியம் என்றார் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ. எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் முன்னாள் இடைக்கால தலைமை நிர்வாகியும் செய்தித் துறையில் பழுத்த அனுபவமும் உடைய திரு பேட்ரிக் டேனியல், 2022ல் தாம் நிகழ்த்திய விரிவுரைகளைக் கொண்ட நூலை நேற்று முன்தினம் வெளியிட்ட நிகழ்வில் அமைச்சர் டியோ இவ்வாறு பேசினார். நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஊடகத்துறை ஆற்றும் பங்கின் மீது அரசாங்கம் வைத்திருக்கும் மதிப்பு, இருதரப்பு உறவின் அடித்தளம் என்றார் திருவாட்டி டியோ.
புதுவகை மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை
உணவுப்பொருள் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பொதுமக்கள் மோசடிக்காரர்களுக்கு வாட்ஸ்அப் அனுப்பியதும் இணையத் தொடர்பு ஒன்றை மோசடிக்காரர்கள் அனுப்பி அதை 'கிளிக்' செய்து உணவுக்குக் கட்டணம் செலுத்த ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யச் சொல்வர். வங்கிக் கணக்குகளில் அல்லது கடன் அட்டைகளில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் செய்யப்படுவதை அடுத்து அது குறித்து விசாரிப்பதாக மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டோருடன் தொடர்புகொண்டு தங்களை வங்கி அதிகாரிகளாக அறிமுகப்படுத்திக்கொள்வர். தாங்கள் அனுப்பும் இணையத் தொடர்புவழி போலி 'ஸ்கேம்ஷீல்டு' செயலியைப் பதிவிறக்கம் செய்திடுமாறு கூறுவர். இவ்வாறு மூன்றாம் தரப்புத் தளங்களிலிருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதால் ஒருவரின் கைப்பேசி அல்லது கணினியில் தீங்கிழைக்கும் மென்பொருள்கள் பதிவிறக்கமாகிவிடலாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
குர்பான் சடங்கிற்கான முன்பதிவு
தொடங்கிவிட்டது
ஹஜ்ஜுப் பெருநாளுக்கான வருடாந்திர குர்பான் சடங்குக்குரிய முன்பதிவு நேற்று தொடங்கியது. கால்நடைகளை பலிகொடுத்து, அவற்றின் இறைச்சி வழிபாட்டாளர்களுக்கும் ஏழை எளியோருக்கும் விநியோகிக்கப்படும். 52 பள்ளிவாசல்கள் வெளிநாட்டு குர்பான் சேவைகளை வழங்கவுள்ளதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்துள்ளது. முன்பதிவுக்கான இறுதி நாள் ஜூன் 23.

