மோனலிசா
சாலையருகே அசைவற்றுக் கிடந்தவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக சிங்கப்பூர்க் காவல் துறையைச் சார்ந்த நான்கு கூர்க்கா படை அதிகாரிகளுக்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் 'உயிர்காப்பான் சமூக விருது' வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி காலை 11.40 மணியளவில் உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டை பக்கத்திலுள்ள ஒரு சாலைச் சந்திப்பின் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர், தம் மிதிவண்டியை ஓட்டிச்சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிக் கிடந்தார்.
தங்களது வழக்கமான சுற்றுக்காவல் பணியிலிருந்த நான்கு கூர்க்கா படை அதிகாரிகளும் ஆடவரைக் கண்டதும் உடனடியாக அவசர மருத்துவ வண்டியை உதவிக்கு அழைத்தனர். சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தொலைபேசி வழி அளித்த வழிகாட்டுதலுடன் கூர்க்கா அதிகாரிகள் அந்த ஆடவருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளித்தனர்.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள் தகவலறிந்து வருவதற்குள் அதிகாரிகள் தொடர்ந்து ஆறு முறை 'சிபிஆர்' அளித்தனர்.
பின்னர், அங்கு வந்து சேர்ந்த துணை மருத்துவப் படையினர் சிகிச்சை அளித்தபின் அந்த ஆடவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
விருது பெற்ற கூர்க்கா படை அதிகாரி திரு மான் குமார் லிம்பு, 40, "சம்பந்தப்பட்ட நபர் நலமாக இருக்கிறார் என்ற செய்தி கிடைத்த பின்னரே எங்களுக்கு நிம்மதியாக இருந்தது. இதுபோன்ற ஒரு சூழலில் யார் வேண்டுமானாலும் உதவலாம். இதற்குப் பொதுமக்கள் அனைவரும் அடிப்படை உயிர்காக்கும் சிகிச்சைமுறைகளைக் கற்றுக்கொள்வது நல்லது," என்றார்.
பொதுநல உணர்வுடன் அவசர காலத்தில் பிறரது உயிரைக் காப்பாற்றுவோரின் சமூக அக்கறையைச் சிறப்பிக்கும் வண்ணம் இந்நிகழ்வில் 'உயிர்காப்பான் சமூக விருது', 'உடனடி உதவி வழங்குவோருக்கான சமூக விருது' என இரு பிரிவுகளில் மொத்தம் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

